
சிவகாசி: கண்மாய் முழுவதுமே கழிவுநீர், குப்பை, சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு என கடம்பன்குளம் கண்மாய் வீணாக உள்ளது.
சிவகாசி அருகே பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாய் 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 75 ஏக்கர் பாசன வசதி கொண்ட கண்மாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு பயன்பட்டது. கண்மாயைநம்பி கம்பு, நெல் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளனர்.
மேலும் அதே காலகட்டத்தில் அப்பகுதியினர் குளிக்க, துணி துவைக்க என பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் கண்மாய் முழுவதுமே கழிவுநீர் தேங்கியுள்ளது. அருகிலுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், குடியிருப்புகளின் கழிவுநீர் கண்மாயில் தான் கலக்கின்றது. இதனால் கண்மாய் முழுவதுமே பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றது.
நகரின் ஒட்டுமொத்த குப்பையும் கண்மாயில்கொட்டப்படுகின்றது. இதில் ஏற்படும் துர்நாற்றத்தினால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கண்மாய்க்கு திருத்தங்கலில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பினால் அடைக்கப்பட்டுள்ளது. கண்மாய் துார்வாரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கண்மாய் முழுவதுமே சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளது.
சிறிய மழை பெய்தாலும்கண்மாய் நிறைந்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் வந்து விடுகின்றது. கண்மாயிலுள்ள இரு மடைகளும் சேதமடைந்திருப்பதால் தண்ணீரை வெளியேற்ற வழி இல்லை.
இதனால் கடந்த காலங்களில் பெய்த மழையால் கண்மாய் நிறைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஒரு மாதம் வரை தண்ணீர் வற்றவில்லை. கண்மாய்க்கு உள்ளேயே மயானம் உள்ளது. இறந்த நபர்களை அடக்கம் செய்ய மழைக்காலங்களில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கண்மாய்க்குள் உயரமாக ரோடு அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
கழிவு நீர் வெளியேற்றவேண்டும்
காளியப்பன்: கடம்பன்குளம் கண்மாயில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். கண்மாய் தண்ணீரை பயன்படுத்தும் வகையில், கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். கரை வழியே மற்ற பகுதிகளுக்கும் செல்வதால் மழைக்காலங்களில் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே கரையில் தார் ரோடு அமைக்க வேண்டும்.
கலங்கல் குடிநீர்
சுந்தர்: கண்மாய்க்குள் போர்வெல் அமைக்கப்பட்டு இப்பகுதியினருக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கண்மாய் முழுவதுமே கழிவு நீராக மாறிவிட்டதால், இதன் மூலம் கிடைக்கின்ற தண்ணீர் கலங்கலாக வருகின்றது.
இதனை புழக்கத்திற்கு கூட பயன்படுத்த முடியவில்லை. கண்மாய் நிறைந்தால் தண்ணீரை வெளியேற்ற, மடைகளை சீரமைக்க வேண்டும்.தொழிற்சாலைகள், குடியிருப்புகளின் கழிவுநீர் கண்மாயில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
பிரபு: கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வாறுகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே வேறு வழியின்றி கழிவுநீரும் கண்மாய்க்கு வந்து விடுகின்றது. கண்மாய் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆழமாக துார்வார வேண்டும்.
கண்மாய்க்கரை முழுவதுமே திறந்தவெளி கழிப்பறையாக மாறிவிட்டது. துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகின்றது. தற்போது கண்மாய் முடிவதும் கழிவு நீர் நிறைந்துஉள்ளது.