சிவகாசி: கண்மாய் முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது, வரத்து கால்வாய் முழுவதும் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு, கழுங்கு, மடை சேதமடைந்து திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய் பரிதாபத்தில் உள்ளது.
80 ஏக்கர் பரப்பளவு, 100 ஏக்கர் பாசன வசதி கொண்ட உறிஞ்சுகுளம் கண்மாயை நம்பி விவசாயிகள் இப்பகுதியில் நெல் வாழை, பயிரிடுகின்றனர். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் நிறைந்து உறிஞ்சிகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வருகின்றது.
இங்கிருந்து செங்கமலப்பட்டி புதுக்கண்மாய், செல்லை நாயக்கன்பட்டி, ரங்கசமுத்திரம், வாடியூர் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. பெரியகுளம் கண்மாயிலிருந்து உறிஞ்சிகுளம் வருகின்ற வரத்துக் கால்வாய் துார்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் வருவது தடை ஏற்படுகிறது.
மேலும் பாப்பாங்குளம் கண்மாய் கழிவுநீர் உறிஞ்சிகுளம் வருகின்றது. வரத்துகால்வாய் வழியாக கழிவு நீர் மட்டுமே வருவதால் உறிஞ்சு குளம் கண்மாய் முழுவதும் கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்டது.
அதே சமயத்தில் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும் பலன் இல்லாமல் போகின்றது. கடந்த காலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும், கண்மாயின் கழுங்கு, மடைகள் சேதமடைந்து, தண்ணீர் வெளியேறி விட்டது. இதனை சமூக ஆர்வலர்கள் மணல் மூடைகளை கொண்டு சரி செய்து இருந்தனர்.
மேலும் பலவீனம் அடைந்தால் கரைகளும் தன்னார்வலர்களால் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டது. கண்மாய் முழுவதுமே கழிவுநீர் என்பதால் இதனை நம்பி நெல், வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்த தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சுகையில் பயிர்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி விட்டது. கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் இப்பகுதி குடியிருப்புவாசிகளால் போடப்பட்ட போர்வெலிலிருந்து சுத்தமில்லாத தண்ணீர் கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்தும்மக்களும் பல்வேறு நோய்க்கும் ஆளாகின்றனர். கண்மாயின் அனைத்து பகுதிகளிலுமே கரைகள் பலவீனம் அடைந்துள்ளது.தவிர கண்மாய்க்குள் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்களும் ஆக்கிரமித்துஉள்ளது. முழுமையாக கண்மாயினை துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அழகர்சாமி, விவசாயிகள் சங்கத் தலைவர் திருத்தங்கல்: இருபோகம் விவசாயத்திற்கு பயன்படுகின்ற தண்ணீர் கழிவு நீராக மாறியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அரசு மருத்துவமனையின் முன்பு வருகின்ற வரத்துக் கால்வாயினை முழுமையாக துார்வார வேண்டும். இதற்கு அருகில் உள்ள கழுங்கும் சேதமடைந்திருப்பதால் தண்ணீர் வெளியேறுகிறது.
செல்லப்பாண்டி, விவசாயி: இந்தக் கண்மாயினை நம்பி நெல், வாழை பயிரிடப்படுகின்றது. எனவே கண்மாயை முழுமையாக துார்வாரி கழிவுகள், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏனெனில் கண்மாயை நம்பி இருக்கின்ற மற்ற கண்மாய்களுக்கும் கழிவுநீர் செல்கின்றது. இதனால் மற்ற கண்மாய்களின் நீர் நிலையும் பாதிக்கப்படுகின்றது.
ஐகோர்ட், மகாராஜா விவசாயி: விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகின்ற கண்மாய் பலனில்லாமல் போய்விட்டது. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்த கண்மாய் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டது. ஆனால் இந்த குடிநீர் ஆதாரமே தேவையில்லை என மக்கள் நினைக்கும் அளவிற்கு கண்மாய் மாறிவிட்டது. கண்மாய் முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது.
கண்மாயில் கழுங்கு, மடைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கண்மாயில் குப்பை கொட்டப்படுவது தடுக்க வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்குள் இப் பணிகளை மேற்கொண்டால் பயன்உள்ளதாக இருக்கும்.