ADDED : டிச 19, 2024 04:21 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பெரிய கண்மாயின் ஒரு புறம் கரை இல்லாததால் தேங்கிய மழை நீர் வெளியேறுவதோடு, ஷட்டர் பழுதால் தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பந்தல்குடி ஊராட்சியில் பெரிய கண்மாய் உள்ளது. சுமார் 96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரு காலத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது.
கண்மாயை ஒட்டி 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தந்தது. பருத்தி, நெல், உள்ளிட்ட உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டன. முக்கிய பயிராக நெல் விளைவிக்கப்பட்டது.
கண்மாயை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் கண்மாயில் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. கிராமங்களில் உள்ள கழிவுநீரும், குப்பைகளும் கண்மாய் கொட்டப்படுகிறது.
கண்மாயில் உள்ள 2 மதகுகள் சீர் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இவற்றை ஒட்டி செல்லும் மழைநீர் வாறுகால்களும் சேதமடைந்து விட்டன.
கண்மாயில் 3 கரைகள் உள்ளன. ஒரு பகுதியில் கரை இல்லை. இதனால் மழைக்காலங்களில் பெருகும் தண்ணீர் கண்மாயில் ஓரளவிற்கு தான் சேருகிறது. தண்ணீர் அதிக அளவில் சேரும்போது கரை இல்லாத பகுதியில் வெளியேறுவதால், அதற்கு முன்பே கண்மாய் தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.
கரை இல்லாத பகுதியில் காந்திநகர் தெரு, பூசாரி ரெட்டிபட்டி தெரு, போடு ரெட்டிபட்டி தெரு உட்பட தெருக்கள் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் அதிக வெள்ளம் வரும்போது இந்த பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடும்.
கண்மாய் கரையை மட்டும் தான் உயர்த்துகின்றனர். கண்மாயை ஆழப்படுத்தி சமச்சீராக தரையை சரி செய்வது இல்லை.
இதனால் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் வெள்ளம் தேங்கி அந்தப் பகுதியின் கரை பலம் இழந்து விடுகிறது. கண்மாயை முறையாக பராமரித்து, ஷட்டரை பழுது நீக்கி கண்மாயில் மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசன வசதி இல்லை
மணிமாறன், விவசாயி: நாங்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறோம். கண்மாயை ஒட்டிய பகுதியில் உள்ள எங்கள் நிலத்தில் நெல், வாழை, பருத்தி பயிர்களை பயிரிட்டு வந்தோம். கண்மாயில் முழுமையாக
தண்ணீர் நிறையாததால் விவசாயத்திற்கு பாசன வசதி கிடைப்பது இல்லை. கண்மாயை பராமரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கண்மாயில் குப்பை
சிவா, சமூக ஆர்வலர்: பந்தல்குடி பெரிய கண்மாயை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கரையை மட்டும் உயர்த்துகின்றனர்.
கண்மாயில் குப்பைகள், கழிவு நீர், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது.
தற்போது பெய்த மழையில் கண்மாய் ஓரளவுக்கு நிறைந்து இருந்தாலும் தண்ணீர் சுகாதார கேடாக உள்ளது.
இதே நிலைமை நீடித்தால் கண்மாய் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டு விடும்.
ஷட்டர்கள் பழுது
பெருமாள்சாமி, விவசாயி: பெரிய கண்மாயை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பது இல்லை.
கண்மாயில் ஷட்டர்களை பராமரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கண்மாயில் கரையை உயர்த்தினால் மட்டும் போதாது. அதன் தரையையும் சமன் செய்ய வேண்டும்.