ADDED : மே 31, 2024 06:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சென்னிகுளத்தை சேர்ந்தவர் காளிச்சாமி, 31. கூலித் தொழிலாளி. இவர் ஆலங்குளம் அருகே எழுவன்பச்சேரியை சேர்ந்த லட்சுமியை,27,திருமணம் செய்து தனது ஊரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் காளிச்சாமியின் நண்பர் ஒருவருடன் லட்சுமிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டு, அலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை கணவர் காளிச்சாமி கண்டித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் சொந்த ஊரான எழுவன்பச்சேரி கிராமத்தில் இருவரும் குடியேறினர். 2021 அக்.21 இரவு 10:00 மணிக்கு லட்சுமி அப்பகுதியில் உள்ள கண்மாய் கரையில் இருந்து கள்ளக்காதலுடன் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த கணவர் காளிச்சாமி, கத்தியால் குத்தி மனைவி லட்சுமியை கொலை செய்தார். ஆலங்குளம் போலீசார் காளிச்சாமியை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் காளிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.