/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகாய் அமைத்த ஹைமாஸ் மின்விளக்குகள் * ஏற்க தயங்கும் உள்ளாட்சி அமைப்புகள்
/
நகாய் அமைத்த ஹைமாஸ் மின்விளக்குகள் * ஏற்க தயங்கும் உள்ளாட்சி அமைப்புகள்
நகாய் அமைத்த ஹைமாஸ் மின்விளக்குகள் * ஏற்க தயங்கும் உள்ளாட்சி அமைப்புகள்
நகாய் அமைத்த ஹைமாஸ் மின்விளக்குகள் * ஏற்க தயங்கும் உள்ளாட்சி அமைப்புகள்
ADDED : மார் 14, 2025 06:32 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் அரசு மருத்துவமனை முதல் குன்னூர் விலக்கு ரோடு வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (நகாய்)சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் 10 இடங்களில் ஹைமாஸ் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பல மாதங்களான நிலையில், அதனை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்க மறுப்பதால் பயனற்ற நிலையில் மின்கம்பங்கள் உள்ளது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூர் வரை உள்ள மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 744 ரோடு பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக கடந்த ஆண்டு காணப்பட்டது.
இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரி வந்தனர்.
இதனையடுத்து சொக்கநாதன் புத்தூர் விலக்கு முதல் தேவதானம், சேத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, கல்லுப்பட்டி, குன்னத்தூர் வரை சேதமடைந்த ரோட்டை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைத்து, விபத்து தடுப்பு போர்டுகள் வைத்தும், ரோட்டில் வர்ணங்கள் பூசியும், மண் குவியல்களை அப்புறப்படுத்தியும் சீரமைத்தது.
இந்நிலையில் கிருஷ்ணன் கோவில் பழைய போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்ச் சந்திப்பு, ஆண்டாள் தியேட்டர் பஸ் ஸ்டாப், வன்னியம்பட்டி விலக்கு பஸ் ஸ்டாப், மஞ்சம்மாள் பாலிடெக்னிக், ராஜபாளையத்தில் அன்னப்பராஜா பள்ளி, சங்கரன்கோவில் ரோடு சந்திப்பு, இளந்தோப்பு அரசு மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் ஹைமாஸ் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஹைமாஸ் மின்விளக்குகள் அமைக்கப்பட்டாலும், அதனை சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளை பராமரிக்க வேண்டும் என்பதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி, தெற்குவெங்கநல்லூர், மேலப்பாட்டம் கரிசல்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, விழுப்பனூர் ஊராட்சிகள் இதனை ஏற்கவில்லை.
இதனால் ஹைமாஸ் மின்விளக்குகள் அமைத்து பல மாதங்களாகியும் இதுவரை செயல்படாமல் காட்சி பொருளாக நிற்கிறது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.