/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகல ரயில்பாதையில் மைசூர் -- செங்கோட்டை ரயில்
/
அகல ரயில்பாதையில் மைசூர் -- செங்கோட்டை ரயில்
ADDED : செப் 06, 2024 04:37 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் - -செங்கோட்டை அகல ரயில் பாதை வழித்தடத்தில் முதல்முறையாக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பயணித்தது.
விருதுநகர் -செங்கோட்டை அகல ரயில் ஆக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் தற்போது மதுரை, மயிலாடுதுறை பயணிகள் ரயிலும், வேளாங்கண்ணி, கொச்சுவேலி, கொல்லம், குருவாயூர், சிலம்பு, பொதிகை ரயில்களும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் கோவை, பெங்களூர், திருப்பதி மற்றும் பல்வேறு வடமாநில நகரங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் முதல் முறையாக கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து செப். 4, 7 தேதிகளில் இரவு 9: 20 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக மறுநாள் மாலை 4:50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் செப். 5, 8 தேதிகளில் இரவு 7:45 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் மதியம் 2:20 மணிக்கு மைசூர் சென்றடையும் வகையில் ஒரு ரயில் இயக்க அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று முதல்முறையாக விருதுநகர்- செங்கோட்டை அகல ரயில் வழித்தடத்தில் பயணித்தது.
ஏசி, ஸ்லீப்பர் முன்பதிவு பெட்டிகளில் குறைந்த அளவு பயணிகளே பயணித்தனர். முன்பதிவு இல்லாத 4 பெட்டிகளில் பலர் பயணித்தனர்.
தற்போது 2 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயிலை குறைந்த பட்சம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமையில் செங்கோட்டையிலிருந்து மைசூர் செல்லும் வகையில் இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.