/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குளியல் தொட்டி, கட்டண கழிப்பறை
/
செயல்படாத குளியல் தொட்டி, கட்டண கழிப்பறை
ADDED : ஏப் 28, 2024 06:25 AM

காரியாபட்டி : செயல்படாத குளியல் தொட்டி, கட்டண கழிப்பறை, இடையூறான டிரான்ஸ்பார்மர் போன்றவற்றால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கட்டண கழிப்பறை, 5 மாதங்களாக செயல்பாட்டில் இல்லை. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கல்குறிச்சி -விருதுநகர் மெயின் ரோட்டில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் உள்ளன. இதன் அருகே ஸ்டேட் வங்கி உள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மழை நேரங்களில் அறியாமையில் மின்கம்பங்களை தொடும் பட்சத்தில் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மல்லாங்கிணர் கோவில்பட்டி ரோட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஏராளமானோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. குளிக்க வசதியின்றி அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்த வேண்டும்
முனீஸ்கண்ணன், தனியார் ஊழியர்: கல்குறிச்சி விருதுநகர் மெயின் ரோட்டில் ஸ்டேட் பாங்க் எதிரில் ஒரே இடத்தில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் உள்ளன. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அறியாமையில் மின்கம்பங்களை தொட வேண்டிய சூழ்நிலை உள்ளது. மழை நேரங்களில் வாடிக்கையாளர்கள் பாதிக்கக் கூடும். விபத்து அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி மாற்று இடத்தில் மாற்றி அமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விபத்திற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
குமார், தனியார் ஊழியர்: பஜார் அருகே கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. பஸ்சிற்காக காத்திருப்பவர்கள், வெளியூர்காரர்கள் என பலருக்கும் ஆத்திர அவசரத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது 5 மாதங்களாக செயல்படவில்லை. இதனை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு வணிக வளாகம் கட்டும் பட்சத்தில் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்படும். மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
செயல்படுத்த வேண்டும்
அழகர்சாமி, தனியார் ஊழியர்: மல்லாங்கிணர் - கோவில்பட்டி ரோட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. சுற்றி உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. குளியல் தொட்டி இல்லாததால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட குளியல் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

