/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
/
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஜூன் 04, 2024 05:49 AM

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலப்பட்டி ஊராட்சியில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை, செயல்படாத சுகாதார வளாகம் என மக்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
செல்லையநாயக்கன்பட்டியை உள்ளடக்கிய செங்கமலப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. செங்கமலப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சுகாதார வளாகம் கட்டி இது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் அப்பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ளது. செல்வ விநாயகர் கோயில் அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் மாராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டும் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.
இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோடு குறுகியதாக இருப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் எளிதில் விலகிச் செல்ல முடியவில்லை. குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ரேஷன் கடை அலுவலகம் அருகே மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது.
கோபால்சாமி: செங்கமலப்பட்டியிலிருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம் நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர். தவிர இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. தொழிலாளர்கள் வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் தான் வர வேண்டும். இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரோடு முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
வேறு வழியின்றி இதில் செல்கின்ற வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றது. மழைக்காலங்களில் ரோடு போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறிவிடுகின்றது. எதிர்பாராமல் விபத்து நடைபெறும் போது மீட்பு பணிக்கும் சிரமம் ஏற்படுகின்றது. எனவே உடனடியாக ரோட்டினை சீரமைக்க வேண்டும்.
கனிப்பாண்டி, துணைத் தலைவர்: இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய இரு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட வேண்டும். மேலும் ஒரு சில தெருக்களில் ரோடு வாறுகால் சீரமைக்க வேண்டும். முருகன் காலனி மயான கொட்டகையை சீரமைக்க வேண்டும்.
முருகன், ஊராட்சி தலைவர்: செல்லைய நாயக்கன்பட்டியில் தெருக்களில் புதிதாக ரோடு வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கமலபட்டியிலும் ஒரு சில தெருக்களில் ரோடு வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிதிகள் ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.