/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணி துார்வாரும் டெண்டரை ரத்து செய்ய எதிர்ப்பு
/
ஊருணி துார்வாரும் டெண்டரை ரத்து செய்ய எதிர்ப்பு
ADDED : செப் 11, 2024 12:18 AM
சிவகாசி: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.70 கோடி மதிப்பில் பொத்தமரத்து ஊருணி துார்வாரும் டெண்டரை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து, தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
சசிகலா, தி.மு.க.,: வார்டுகளில் கால்வாய் துார்வார வேண்டி உள்ளது. இதற்குத் தேவையான இயந்திரங்களைக் கேட்டால் அதிகாரிகள் டீசல் இல்லை என்கின்றனர். இதனால் துாய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்: ஒரு வாரமாக டீசல் பில் பிரச்னை இருந்தது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
ரவிசங்கர், காங்.,: கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்னரே பொத்து மரத்து ஊருணியை துார்வார ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதே பணிகள் தொடங்கி இருந்தால் இதற்குள் நிறைவடைந்திருக்கும். டெண்டர் ரத்து செய்யப்பட்டால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி பதிப்பு ஏற்படும்.
உதவி பொறியாளர் ரமேஷ்: டெண்டர் விடப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், வழக்கு பணிகளை தொடர முடியவில்லை. இதனால் திட்ட மதிப்பு உயர்ந்து விட்டதாக கூறி ஒப்பந்ததாரர் பணிகளை செய்ய மறுக்கிறார்.
ஞானசேகரன், தி.மு.க.,: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமுடன் செயல்பட்டதால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். அதிகாரிகளின் தவறு காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்தமரத்து ஊருணி டெண்டர் ரத்து செய்யும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும், என்றார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் பூரணி டெண்டரை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமிஷனர்: நீதிமன்ற வழக்கு முடிந்த பின்னர் ஊருணி துார்வாரும்பணி மீண்டும் தொடங்கப்படும்.
மேயர்: இந்த தீர்மானம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பாக்கியலட்சுமி, தி.மு.க.,: சிறுவர் பூங்கா அமைக்கும் பணிக்கு முதலில் ரூ.87ஏழு லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் ரூ.37 லட்சத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதி பணிகள் மட்டுமே நடந்துள்ளது. தனி நபருக்கு பாதை அமைப்பதற்காக, பூங்காவில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஞானசேகரன்: சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் இன்றி, காலி இடங்கள் நத்தம் புறம்போக்கு என மாற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்று அந்த வகை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.
சேதுராமன், தி.மு.க.,: பில் கலெக்டர்கள் பற்றாக்குறை காரணமாக பெயர் மாற்றம், தீர்வை உள்ளிட்ட பணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு பில் கலெக்டர் 8 வார்டுகள் பார்ப்பதால், அவர்களுக்கு உரிய விவரம் தெரியவில்லை.
மேயர்: மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.