/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல்
/
சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல்
ADDED : ஏப் 30, 2024 12:15 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலால் வரும் மயக்கம், உடல் சோர்வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வினியோகிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் காலையிலேயே மைதானங்களில் கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டனர்.
வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்களுக்கு உடலில் தேவையான ஆற்றல் இல்லாமல் மயக்கம், சோர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ்., பவுடர் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
மாவட்டத்தில் 7 நகர்புற சுகாதார நிலையங்கள், 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களிலும் ஓ.ஆர்.எஸ்., பவுடர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கார்னர் அமைக்கப்பட்டு ஓ.ஆர்.எஸ்., கரைசல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு மக்கள் நேரடியாக சென்று கரைசலை அருந்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலின் எலக்ட்ரோல் அளவை அதிகரிக்க ஓ.ஆர்.எஸ்., பவுடர் பயன்படுகிறது. அனைத்து நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கார்னர் அமைக்கப்பட்டு தேவைக்கேற்ப 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கரைசல் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.

