/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருட்டில் மேம்பாலம், எரியாத ஹைமாஸ் விளக்கு
/
இருட்டில் மேம்பாலம், எரியாத ஹைமாஸ் விளக்கு
ADDED : மே 10, 2024 01:57 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் சந்திப்பில் எரியாத ஹைமாஸ் விளக்கு மற்றும், அந்தப் பகுதி வழியாக செல்லும் மேம்பாலத்திலும் மின்விளக்கு எரியாமல் இருட்டாக இருப்பதால் காந்தி நகர் வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி ரோடு செல்லும் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காந்தி நகர் உள்ளது. இதன் வழியாக செல்லும் திருச்சுழி ரோட்டின் வடக்கு பகுதி நகராட்சிக்கு கட்டுப்பட்டும், தெற்கு பகுதி கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு கட்டுப்பட்டும் உள்ளது.
காந்தி நகரின் சந்திப்பில், ஜவுளி கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உட்பட பல கடைகள் உள்ளன. இந்த சந்திப்பு வழியாகத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் வந்து செல்வர். புறநகர் பகுதி மக்களும் இந்த சந்திப்பு வழியாகத்தான் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்ல முடியும். இந்தப் பகுதியில் மினி பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
இங்குள்ள போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்காரும் இருக்கைகள் உடைந்து உள்ளன. இதனால், பயணிகள் நின்று கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறம் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சந்திப்பில் உள்ள ஹைமாஸ் லைட் எரியாமல் உள்ளது. இந்த பகுதி மேம்பாலத்தில் இரவு நேரங்களில் லைட்டுகள் எரிவதே இல்லை.
இரவு நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் காந்தி நகர் சந்திப்பு இருட்டாகவே உள்ளது. திருச்செந்தூர், தூத்துக்குடி பஸ் ஏறும் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு பகுதி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள தெருக்களில் ரோடு, வாறுகால் வசதிகள் இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.