சந்தன மரம் திருட்டு
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் 49. கம்மாபட்டி ரோட்டில் ஸ்பின்னிங் மில் வளாகத்தை சுற்றி தென்னை மரங்கள் உட்பட 100 சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நுாற்பாலை வளாகத்தில் இரவு மர்ம நபர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததை கண்டு காவலாளி சத்தமிட்டுள்ளார். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 சந்தன மரங்களின் கட்டைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றவர் குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விசைத்தறியில் கைத்தறி சேலை
சேத்துார்: சேத்துார் பகுதியில் விசைத்தறி கூடத்தில் சட்ட விரோதமாக கைத்தறியில் நெய்ய கூடிய சேலை ரகம் உற்பத்தி நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து சென்னை கைத்தறித்துறை அதிகாரி மனோகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் சேத்துார் ஜீவா நகர் வடக்கு தெருவை சேர்ந்த ராம் பிரசாத் 42, என்பவரது விசைத்தறியில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சேத்துார் போலீசாரிடம் குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.