ஆதரவற்றவரை தாக்கியவர் மீது வழக்கு
விருதுநகர்: கூரைக்குண்டை சேர்ந்த பழனியப்பன் 60.இவர் தனது ஸ்மார்ட்போனில் சமூகவலைத்தளத்தை பார்த்து கொண்டிருந்த போது,விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஒரு வயது முதிர்ந்த நபரைஒரு நபர் கம்பால் அடித்து, திட்டியதை பார்த்துள்ளார்.அடித்தவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டி வரும் ராஜேந்திரன் என்பதும்,பாதிக்கப்பட்ட பெரியவர்பெயர், விலாசம் தெரியாத ஆதரவற்ற முதியவர் என்பதும் தெரிந்தது. மேலும் இச்சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. பழனியப்பன் வீடியோவை பென்டிரைவில் போலீசாரிடம் சமர்ப்பித்தார். ராஜேந்திரன் மீது மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காவலர் டூவீலர் சேதம் : இருவர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் டவுன் போலீசில் காவலராக பணிபுரிந்து வருபவர் கோபால், 38. நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு வைப்பாறு பாலம் அடியில் சர்வீஸ் ரோட்டில் எஸ்.ஐ., சீனிவாசன், தலைமைக்காவலர் மாதவனுடன் வாகன சோதனை செய்தார். அப்போது தெற்கு பட்டி துரைப்பாண்டி, 21. தெற்கூர் மாரிமுத்து, 25. ஆகியோர் மது போதையில் டூவீலர் ஓட்டி வந்தனர் . காவலர் கோபால் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் காவலர் கோபாலின் டூ வீலரை கல்லால் அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாபாரி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா, 60, வியாபாரி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு திருமுக்குளத்தில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.
கோயிலில் திருட்டு முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ரோட்டில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக் கோயில் பூஜாரி பாத முத்து, 56, ஏப்.5 அதிகாலை கோயிலை திறந்தபோது, மூலஸ்தான உண்டியல் மற்றும் கிழக்கு பக்கத்தில் இருந்த உண்டியல் பூட்டுகள் உடைந்து கிடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் உண்டியல் பணத்தை கோயில் நிர்வாகம் எடுத்திருந்த நிலையில் பணம் எதுவும் திருடு போகவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

