வீட்டில் கஞ்சா செடி: ஒருவர் கைது
சிவகாசி: மீனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் 38. இவர் தனது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கல்லுாரி மாணவி மாயம்
சிவகாசி: அனந்தப்பன் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் மகள் ஜோதி ஆனந்தி 19. சிவகாசியில் உள்ள கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த அவர் கல்லுாரி விடுமுறை என்பதால் சிவகாசியில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல கடைக்கு வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் 3 பவுன் செயின் திருட்டு
விருதுநகர்: பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரன் 52. இவர் மே 27ல் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3:15 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது உள்தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 3 பவுன் செயினை அடையாளம் தெரியாத நபர் திருடி மாடிபடி வழியாக தப்பிச்சென்றது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வெயிலில் பணி; நெஞ்சுவலியில் பெயிண்டர் பலி
விருதுநகர்: கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயன் 40. இவர் மே 28 காலை 11:00 மணிக்கு பெயிண்டிங் பணியின் போது வெயிலின் தாக்கத்தால் படபடப்பு ஏற்பட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பலியானதாக தெரிவித்தனர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.