டீ வியாபாரிக்கு அடி
சிவகாசி: சிவகாசி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி 55. டீ வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள பேக்கேஜிங் கம்பெனிக்கு டீ கொடுக்க சென்றார். அப்போது வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரை சித்துராஜபுரத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் 27, அய்யனார் காலனி ராஜேஷ் 32, ஆகியோர் விரட்டி வந்தனர். இதனை தடுக்க முயன்ற கோபால்சாமியை, புருஷோத்தமனும் அய்யனாரும் தகாத வார்த்தை பேசி கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரையும் மாரனேரி போலீசார் கைது செய்தனர்.
----இருவர் காயம்
சிவகாசி: சிவகாசி கீழ பெத்துலு பட்டியை சேர்ந்தவர் கண்ணன் 38. இவர் நாரணாபுரம் ரோட்டில் நடந்து சென்ற போது விருதுநகர் கன்னி சேரி புதுாரை சேர்ந்த சுமித் 32 ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசாருக்கு கொலை மிரட்டல்
சிவகாசி: சிவகாசி எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் 41. கொத்தனேரி அருகில் உள்ள பாரில் செவலுாரைசேர்ந்த ஹரிஹரன் அழகப்பன் ஆகியோர் பாரில் வேலை செய்த வல்லரசு என்பவருடன் தகராறு செய்தனர். இதுகுறித்து விசாரிக்க சென்ற ஜெயக்குமார் தகவலின் பேரில் ஹரிஹரன் அழகப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் செவலுாரில் உள்ள அய்யனார் கோயில் பொங்கல் திருவிழாவில் பணி நிமித்தமாக சென்ற போது அங்கிருந்த ஹரிஹரனின் சகோதரர் சக்திவேல், ஜெயக்குமாரை தகாத வார்த்தை பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். எம் புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெயின்டர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் மனோஜ் குமார் 43. பெயின்டர் வேலை செய்து வந்த இவர் சிவகாசி சிறு குளம் கண்மாயில் இறந்த நிலையில் கிடந்தார். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
விருதுநகர்: எம்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் 68. இவர் ஜூலை 1 இரவு 8:45 மணிக்கு விருதுநகர் - சிவகாசி ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் டூவீலர் ஓட்டி வந்த மாத்தநாயக்கன்பட்டி ரோடு வள்ளுவன் நகரைச் சேர்ந்த ஞானரோஜர் மோதியதில் காயமடைந்த பொன்ராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜூலை 2ல் பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மருத்துவமனையில் தகராறு செய்த வாலிபர் கைது
விருதுநகர்: மதுரை தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவமணி 25. இவர் மது குடித்து விட்டு ஜூலை 1 இரவு 10:00 மணிக்கு விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்க்க வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பில் இருந்த ஒப்பந்த ஊழியர்கள் தடுத்ததால் கொலை மிரட்டல் விடுத்தார். சிவமணியை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
மின் வயர் உரசி லாரியில் தீ விபத்து
---சிவகாசி: சிவகாசி அருகில் தெற்கு குப்பனாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் எஸ்.புதுப்பட்டியில் கணேசன் என்பவரின் வைக்கோலை தனது லாரியில் ஏற்றி வந்தார். ரோட்டில் வரும்போது மின் வயர் வைக்கோலில் உரசியதில்தீப்பிடித்தது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு லாரியிலிருந்து வைக்கோலை கீழே தள்ளிவிட்டனர். இதனால் லாரி பெரிய சேதம் இன்றி தப்பியது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.