/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறிகள் ஸ்டிரைக்
/
கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறிகள் ஸ்டிரைக்
ADDED : மே 30, 2024 07:39 PM

சத்திரப்பட்டி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு வழங்க கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனால் பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சத்திரப்பட்டி சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் மருத்துவ துணியான பேண்டேஜ் உற்பத்தி பிரதான தொழிலாக இருக்கிறது. இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சிறு, குறு விசைத்தறிகளில் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு 2022ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் படி, ஊதியம் வழங்க வேண்டும் என கோரி, விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறிகள் இயங்காததால் 2 கோடி ரூபாய் அளவிற்கு பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
'கூலி உயர்வு போராட்டம் குறித்து, மகாசபை கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். போராட்டத்தை தவிர்க்க ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் முன் வர வேண்டும். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் குருசாமி தெரிவித்தார்.