ADDED : செப் 14, 2024 01:54 AM

சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லை, திறக்கப்படாத அவசர கால சிகிச்சை மையம், துாய்மை, துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் அரசு மருத்துவமனை வெங்கடாசலபுரம் ஹவுஸ்சிங் போர்டுகாலனியில் செயல்பட்டு வருகிறது நாள்தோறும் 900த்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் , 80 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்துார் மற்றும் சுற்றுக்கிராம மக்கள் மட்டுமின்றி சிவகாசி அனுப்பங்குளம், வரையிலான நோயாளிகள்இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்துார் அரசு மருத்துவமனை மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது. பெரும்பாலும் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்கள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்த போதும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது பெரும்பாலும் மேல் சிகிச்சைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனை அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி மட்டுமே உள்ளது. சி.டி., ஸ்கேன் வசதி இல்லை. சிடி ஸ்கேன் எடுக்க வேண்டிய நோயாளிகள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டடம் கட்டப்பட்டது இந்த கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையிலும் இன்று வரை திறக்கப்படவில்லை.
முகத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இந்த அவசர சிகிச்சை மையத்தில் ஆபரேஷன் தியேட்டர், எமர்ஜென்சி வார்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் செயல்பாட்டிற்கு வராதால் விபத்தில் சிக்கும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
மருத்துவமனை வளாகம் முழுவதும் பராமரிக்க போதுமான துாய்மை பணியாளர்கள்இல்லை. இதனால் ஆங்காங்கே பிளாஸ்டிக்கேன், இலை சருகுகள்மற்றும் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
துப்புரவு பணியாளர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் பாத்ரூம், கழிப்பறைகள் சுகாதாரமின்றி உள்ளது.
அடிப்படை பணியாளர்கள் தேவை
மாரிக்கண்ணு, சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் அடிப்படையில் தேவையான மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
8 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவரும்,11 மருத்துவ பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 பேரும், 8 துாய்மையாளர்களுக்கு பதில் 2 பேர் பணியில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் குப்பை குவிந்து காணப்படுகின்றனர். டாக்டர்கள் தற்காலிக பணியாளர்களை நியமித்து துாய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஆம்புலன்ஸ்கள் தேவை
சுப்புராஜ், சாத்துார்: அரசு மருத்துவமனைக்கு என2 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. இவை காலாவதியான நிலையில் கண்டம் செய்யப்பட்டது. புதியஆம்புலன்ஸ்கள் வழங்கப்படவில்லை. ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
108 ஆம்புலன்ஸ் மட்டுமே அவசரகாலத்தில் பயன்படுத்தப்படுகிறது. அவசரகாலசிகிச்சை மையம் துவங்கப்பட்டது. ஆனால் இந்த கட்டடம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
விபத்தில் படுகாயம் அடைபவர்கள் விருதுநகர்அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். வசதியற்றவர்கள் தனியார்ஆம்புலன்ஸ்களை அணுகி அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தீர்வு
மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை துப்புரவு, துாய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிப்பதும். அவசர கால சிகிச்சை மைய கட்டடத்தை திறக்கவும், மருத்துவ மனைக்கு என ஆம்புலன்ஸ்கள் வழங்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.