ADDED : ஜூலை 17, 2026 04:50 PM
சாத்துார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு *விருதுநகர் மருத்துவக் கல்லுாரிக்கு அலைக்கழிப்பதால் அவதி
சாத்துார், ஜூலை 18 -
சாத்துார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மறுத்து விருதுநகர் மருத்துவ கல்லுாரிக்கு உடல்களை அனுப்புவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் அரசு மருத்துவமனை மெயின் ரோட்டில் நகரில் மையப் பகுதியில் செயல்பட்டு வந்தது. சாத்துார் மற்றும் சுற்றுக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏராளமான பேர் சிகிச்சை பெற்று வந்ததால்இட நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2014 ல் வெங்கடாசலபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த புற நோயாளிகள் பிரிவும் உள்நோயாளிகள் பிரிவும் , பிரேத பரிசோதனை கூடமும் புதிய கூடுதல் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் ரத்த சேமிப்பு மையம், கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை ,குழந்தைகள் நல வார்டு,டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவும் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை கட்டடம் சேதமடைந்ததாலும் பொதுப்பணித்துறை கட்டட உறுதிச் சான்று வழங்கவில்லை. கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை, குழந்தைகள் நலவார்டு,ரத்த சேமிப்பு மையம் ஜூன் 12 ல்இருந்து ஹவுசிங் போர்டு காலனி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால்
கிராமப் பகுதிகளில் இருந்து டவுன் பஸ்ஸில் வரும் கர்ப்பிணிகள் பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஹவுசிங் போர்டு காலனிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது . இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் செலவு அலைச்சலும் ஏற்படுகிறது.
சாத்துார் நகர் பகுதியில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் விபத்தில் பலியாகும் நபர்கள் மற்றும் சந்தேக மரணம் அடைபவர்களின் உடல்கள் சாத்துார் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்து வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சாத்துார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனைத்து உடல்களும் அனுப்பபடுகின்றன.
இதனால் எதிர்பாராத மரணங்களை சந்திக்கும் நபர்களின் உறவினர்கள் விருதுநகருக்கும் சாத்துாருக்கும் அலைந்து திரியும் நிலை உள்ளது.
மேலும் தற்போது கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் இயற்கை உபாதையைகழிக்க வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நகர் பகுதி கட்டடத்தை சீரமைக்க வேண்டும்
கிராமப் பகுதிகளில் மட்டுமின்றி நகர் பகுதியில் உள்ள பெண்களும் எளிதாக நகரின் மையப் பகுதியில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஸ்கேன் பரிசோதனை ,ரத்த பரிசோதனை உள்ளிட்டவைகளை ஹவுசிங் போர்டு காலணிக்கு சென்று மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.கர்ப்பிணிகள் ஆட்டோ பிடித்து சென்று சிகிச்சை பெறுகின்றனர். இதனால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கி விரைந்து பணிகளை முடித்து மீண்டும் நகர் பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
சங்கரேஸ்வரன், வியாபாரி . சாத்துார்
சுகாதார வளாகம் தேவை
ஹவுசிங் போர்டு அரசு கூடுதல் கட்டடத்தில் பணியாளர்களுக்கான தனி சுகாதார வளாகம் இல்லை. நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையையே அவர்களும் பயன்படுத்துகின்றனர். தற்போது கர்ப்பிணிகள் புற நோயாளிகள் பிரிவு செயல்படும் இடத்தில புதியதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் செவிலியர்களுக்கான தனி சுகாதார வளாகங்கள் கட்டித் தர வேண்டும்.
மாரிக் கண்ணன், தனியார் நிறுவன ஊழியர்.
தீர்வு
சாத்துார் நகர் பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தை விரைவாக சீரமைத்து மீண்டும் அங்கு கர்ப்பிணிகள் சிகிச்சை பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊழியர்களுக்காக, தனியாக சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விபத்தில் சிக்கி பலியாபவர்களின் உடல்களை சாத்துார் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். இதன் மூலம் மக்களின் அலைக்கழிப்பு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
