ADDED : மே 23, 2025 11:20 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நகர் முழுவதும் குறுகலானஅமைப்பில் ரோடுகள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் அதிக போக்குவரத்து உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ரோடுகளில் பயணிக்கின்றன. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிவாகனங்கள் காலை மாலை என வந்து செல்வதால் இரு நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் ரோடுகளை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தான் புறவழிச் சாலை அமைக்கும் பணி 2016ல் நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறை முடிவு செய்து 66 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி 300 கோடியில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால், அருப்புக்கோட்டை நகருக்குள் வாகனங்கள் வராமல் பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் செல்ல முடியும். மதுரை, தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் இந்த புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்லலாம். ஆனால், நிலத்தை கையகப்படுத்த தாமதமானதால் சாலை விரிவாக்க பணி இழுத்துகொண்டே செல்கிறது.
பிரச்னை
அருப்புக்கோட்டை எல்லையில், விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோடு வழியாக வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி சுக்கிலத்தம் ரோடு வழியாக செல்லலாம். இந்த ரோடு முடிவடைந்த நிலையில் ஒரு சிறு பகுதி மட்டும் தார் ரோடு இல்லாமல் உள்ளது.
இதேபோன்று நகர் எல்லையில் இருந்து கோபாலபுரம் வழியாக சென்று மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக செல்லலாம். ஆனால் கோபாலபுரத்துக்கு வழியாக செல்லும் புறவழிச் சாலை பணிகள் முடியாமல் உள்ளது. இடையில் ஒரு ரயில் பாதை இருப்பதால் மேம்பாலம் கட்டித் தான் செல்ல வேண்டும்.
அதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் மேம்பாலம் கட்டும் பணிகள்இதுவரை நடைபெறவில்லை. ரோடு பணிகளும் அரைகுறையாக நிற்கிறது. 2023ல் துவங்கப்பட்ட பணிகள் இன்று வரை முடியாமல் உள்ளது. மந்தகதியில் நடப்பதால், நகரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.
தீர்வு
புறவழி சாலை பணிகள் விரைவில் முடிவடைந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து புறவழிச் சாலையை பயன்படுத்தி திருச்செந்தூர், ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அருப்புக்கோட்டை நகருக்குள் வராமலேயே செல்ல முடியும்.
வெளியூரிலிருந்து அருப்புக்கோட்டைக்குள் வரும் பள்ளி கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல முடியும். கனரக வாகனங்களுக்கு வசதியாக இருக்கும். நாளுக்கு நாள் நகரில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மந்தகதியில் பணிகள்
ராம்பாண்டியன், சமூக ஆர்வலர்: அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அமைக்கும் பணி ஆண்டு கணக்கில்இழுத்து செல்வதுடன், கோபாலபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறாமல் உள்ளது.புறவழிச் சாலையை சுற்றி 10க்கும் அதிகமான சிறு குளங்கள், கண்மாய்கள், தண்ணீர் செல்லும் ஓடைகள் சாலையை கடந்து தான் வருகிறது.
சாலை பணியினால் நீர் வழித்தடம் தூர்ந்து போய்விட்டது. முறையான பாதை இல்லாததால் மழை நீரும் நிலத்திலேயே தேங்கி பயிர்கள் அழுகி விடுகிறது. புறவழிச்சாலை அமைந்தால்போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லலாம் என எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
போக்குவரத்துநெரிசல் குறையும்
சித்தநாதன், தனியார் ஊழியர்: அருப்புக்கோட்டைக்கு புறவழிச்சாலை அவசியமாக தேவைப்படுகிறது. நகரில் தினமும் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வெளியூரில்இருந்து வரும் வாகனங்கள்நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்ல முடியும். கனரக வாகனங்களுக்கும் வசதியாக இருக்கும். மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.