/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மக்களுக்கு அவசியம்
/
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மக்களுக்கு அவசியம்
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மக்களுக்கு அவசியம்
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மக்களுக்கு அவசியம்
UPDATED : மார் 05, 2025 11:40 AM
ADDED : மார் 05, 2025 05:55 AM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் , ஊராட்சிகளில் வைகை, தாமிரபரணி உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் இல்லாத கிராமங்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் ஓரளவுக்கு கிடைத்தாலும் கூட அவை பாதுகாக்கப்பட்ட குடிநீரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வருகின்ற குடிநீரை மக்கள் புழக்கத்திற்கு தான் பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்கு தனியார் வண்டிகளில் வரும் மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒரு குடம் குடிநீர் 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு கிராமங்களில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தின. 2018 ல், துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தத் திட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் பாலவநத்தம், பெரியநாயகிபுரம் ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டது. மற்ற 30 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 75 க்கு மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருந்தும் அங்கு அமைக்கப்படவில்லை.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. முக்கியமான பகுதிகளில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் முழுமை அடையாமலேயே கைவிடப்பட்டது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பல கிராமங்களில் குடிநீருக்கும் புழக்கத்திற்கும் தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். திருச்சுழி, குச்சம்பட்டி புதூர், உடையனம்பட்டி, தமிழ்பாடி இரைச்சின்னம்பட்டி, உள்ளிட்டகிராமங்களில் குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர். தண்ணீருக்காக குடங்களுடன் அலைகின்றனர். பல ஊராட்சிகளில் வழங்கப்படும் தண்ணீர் புழக்கத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்து அதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு சில கிராமங்களில் அமைக்கப்பட்ட பிளான்ட் பராமரிப்பு இன்றி மோட்டார்கள் பழுதால் காட்சி பொருளாக உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும்.
கிராம மக்கள் குடிநீருக்காக தினமும் தனியார் குடிநீர் நிறுவன வண்டிகளில் வரும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது பாதுகாக்கப்பட்ட குடிநீரா என அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை. வரும் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ள கிராமங்களில் குடிநீருக்காவது சுத்திகரிக்கப்பட்ட பிளான்ட் அமைக்க உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.