/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஜெட்-ராடர் வாகனங்கள் பழுது
/
விருதுநகரில் ஜெட்-ராடர் வாகனங்கள் பழுது
ADDED : ஆக 28, 2024 05:19 AM

விருதுநகர் : விருதுநகரில் பாதாளச்சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கான இரு ஜெட் - ராடர் வாகனங்களிலும் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளில் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் 2007ல் ரூ. 23.25 கோடியில் பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி துவங்கியது. அதன் பின் கூடுதலாக ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. இங்குள்ள 25 ஆயிரம் குடியிருப்புகளில் 12 ஆயிரம் வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளின் கழிவு நீர் தெரு மேன்ஹோல்களில் விழுந்து கழிவு நீர் நீரேற்று நிலையம், உந்து நிலைய கிணறுகளுக்கு செல்லும் படி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மின் மோட்டார்கள் மூலம் கழிவு நீர் பம்ப் செய்யப்பட்டு மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று கவுசிகா ஆற்றில் கலக்கப்படுகிறது.
இந்நிலையில் மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுவதை தடுக்க ஜெட்- ராடர் வாகனங்கள் வாங்கப்பட்டது. இதன் மூலம் அடைப்புகள் உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால் தற்போது வாகனங்கள் பழுதாகி 4 மாதங்கள் ஆகிறது. இந்த வாகனங்கள் தற்போது ராமமூர்த்தி ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை சரிசெய்ய பொறியியல் பிரிவு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதாளச்சாக்கடை அடைப்பு நீக்கும் பணிகள் கிடப்பில் விழுந்தது. இதனால் எல்.பி.எஸ்., நகர் 3 வது தெரு, தர்காஸ் தெரு, காமரான் பை பாஸ் ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோடு, பர்மா காலனி உள்பட பல பகுதிகளில் மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்படுகிறது.
எனவே ஜெட்-ராடர் வாகனங்களை பழுது நீக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.