ADDED : ஜன 29, 2025 06:33 AM
அருப்புக்கோட்டை : தெருக்களில் ரோடு போடாதாதல் கற்கள் கால்களை பதம் பார்க்கிறது. பணி துவங்கி இரு ஆண்டாகியும் முடிவடையாத குடிநீர் மேல்நிலை தொட்டி, வாறுகால் இல்லாததால் தேங்கும் கழிவுநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளால் கஞ்சநாயக்கன்பட்டி ஜெயநகர் குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதி ஜெய நகர்.
இங்கு பல ஆண்டுகளாக தெருக்களில் ரோடுகள், வாறுகால், தெரு விளக்குகள் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து ஜெயநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் முருகேச பாண்டியன், பொருளாளர் மாணிக்க சாமி, உறுப்பினர்கள் சீனிவாசன் உமாசங்கர் கூறியதாவது:
ஜெயநகரில் குறிஞ்சி தெரு, மல்லிகை தெரு, சுந்தர்ராஜ் கார்டன், கிருஷ்ணா வீதி உள்ளிட்ட 17 தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதியை உருவாகி 23 ஆண்டுகள் ஆன போதிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி செய்யவில்லை.
தெருக்களில் ரோடுகள் இன்றி கற்கள் கிடப்பதால் பயந்து நடக்க முடியாமல் காலில் குத்துகிறது. டூவீலர்களில் செல்லும்போது கற்கள் குத்தி டயர்கள் பஞ்சர் ஆகிறது. இந்தப் பகுதி பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் பல பகுதிகளில் தேங்கி கிடக்கிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பல தெருக்களில் தெரு விளக்குகள் இல்லை.
குப்பை அள்ள ஊராட்சியில் குப்பை வண்டிகள் இல்லை. குப்பையை எங்கள் சங்கம் சார்பாக குப்பைத் தொட்டிகளை வைத்து அவற்றில் குப்பைகளை கொட்டுகிறோம். நிறைந்த குப்பையை அப்புறப்படுத்த கூட, தூய்மை பணியாளர்கள் வருவது இல்லை.
இந்தப் பகுதியில் ஊராட்சி மூலம் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணி நடந்தது. 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுத்துள்ளனர்.
இதற்கென தனியாக மேல்நிலைத் தொட்டி அமைக்காமல் ஏற்கனவே இருந்த தொட்டியில் புதிய இணைப்புகளை இணைத்து விட்டதால் வீடுகளுக்கு தண்ணீர் குறைந்த அளவு தான் வருகிறது.
மேடான பகுதிகளுக்கு வருவது இல்லை. ஊராட்சி மூலம் 2021ல், உர கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து விட்டது.
ஜெயநகர் பகுதியில் உள்ள கட்டப்பன் ஊருணியில் குப்பை, கழிவுநீர் கொட்டப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. ஊருணியை தூர்வாரி பராமரித்து மழைநீர் சேகரமாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம், நூலகம், நவீன சுகாதார வளாகம், பூங்கா என எதுவும் இல்லை. இவற்றை அமைக்க தேவையான பொது இடம் இருந்தும் அமைப்பதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பல பகுதிகளில் குப்பையை கொட்டி எரிப்பதால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.
இரவு நேரங்களில் ஷிப்ட் முடிந்து வரும் மில் தொழிலாளர்கள் பயந்து கொண்டே வர வேண்டி உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.