/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதியில் நிற்குது ரோடு பணி, தேங்குது கழிவுநீர்
/
பாதியில் நிற்குது ரோடு பணி, தேங்குது கழிவுநீர்
ADDED : செப் 06, 2024 04:32 AM
அருப்புக்கோட்டை: ஜல்லி பரப்பியதோடு நிற்குது ரோடு பணி, வாறுகால் இல்லாமல் தேங்குது கழிவுநீர், குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் உட்பட பல்வேறுபிரச்சனைகளில் அருப்புக்கோட்டை எம் எஸ்., நகர் மக்கள் தவித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை எம்.எஸ். நகரில் 15 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பல குறுக்கு தெருக்களுக்கு தார் ரோடு அமைக்க பல மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் பரப்பியதோடு அப்படியே விட்டுவிட்டனர். இதனால் வாகனங்களில், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால் வசதி இல்லை.
வீடுகளின் கழிவு நீர் வீடுகளில் ஓரங்களில் விடப்படுகிறது. கழிவுநீர் பல பகுதிகளில் தேங்கி கிடக்கிறது. பகிர்மான குழாய் பல தெருக்களில் உடைந்து குடிநீர் வீணாக வாறுகாலில் கலக்கிறது. நகரில் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் பகிர்மான குழாய் பதிக்காமல் இருப்பதால் குடிநீர் இணைப்பு பெற முடியாமல் உள்ளது.
நகராட்சியின் 'ஏ' பிரிவில் எம்.எஸ்., நகர் இருப்பதால் கூடுதலாக வரிகள் விதிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்படவில்லை. நகராட்சி மூலம் பொது அடி குழாய் அமைக்க வேண்டும்.
மதுரை ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு வழியாக எம்.எஸ்., நகர் வர பாதை உள்ளது. இது சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
சர்வீஸ் ரோட்டை நகராட்சி புதியதாக அமைத்து தர வேண்டும். தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் இரவு நேரங்களில் வீடுகளுக்கு பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் லட்சக்கணக்கில் செலவு செய்து பூங்கா கட்டப்பட்டது.
ஆனால் பயன்பாட்டிற்கு வராமலேயே பூங்கா முட்புதர்கள் சூழ்ந்தும், விஷ பூச்சிகள், பாம்புகள் குடியிருக்கும் பகுதியாக மாறிவிட்டது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன. பூங்காவை புனரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி முன்வர வேண்டும்.