/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொளுத்தும் வெயிலால் இளநீர் ரூ.80க்கு விற்பனை
/
கொளுத்தும் வெயிலால் இளநீர் ரூ.80க்கு விற்பனை
ADDED : ஏப் 28, 2024 06:16 AM

விருதுநகர் : விருதுநகரில் முன்பு எப்போது இல்லாத வகையில் ஒரு இளநீர் ரூ.80க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் சூட்டடை தணிக்க பதனீர், நுங்கு, இளநீர், கரும்புச்சாறு ஆகிய இயற்கை உணவுப்பொருட்களை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தென்னை விவசாயம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்தாலும் வியாபாரிகள் பொள்ளாச்சி, கம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து இளநீர் வாங்கி விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் இளநீரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் வரை ரூ. 40 முதல் ரூ. 60 வரை தரத்திற்கு ஏற்ப இளநீர் விற்பனை செய்யப் பட்டது. ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் விருதுநகரில் மக்கள் அதிகமாக இளநீர் வாங்கி பயன்படுத்தும் நிலையில் ஒரு இளநீர் ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெயில் காலத்தில் கூடுதல் விலை கொடுத்து இளநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக கூடுதல் விலை கொடுத்து வாங்கி வருவதாக பெற்றோர் கூறுகின்றனர்.
இது குறித்து இளநீர் வியாபாரி முருகன் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மரங்களில் விளைச்சல் முன்பு எப்போதும் இல்லாத அளவை விட தற்போது குறைந்து விட்டது. இதனால் குத்தகை தாரர்கள் ஒரு இளநீர் ரூ. 50 என மதுரைக்கு அனுப்புகின்றனர்.
மதுரையில் இருந்து நல்ல தரமான இளநீர் ரூ. 60 முதல் ரூ. 65 என வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விருதுநகருக்கு அனுப்புகின்றனர். இதனால் இளநீர் ரூ. 70 க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தான் இளநீர் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

