/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., வனப்பகுதியில் பல்லுயிர்கள் பகுப்பாய்வு
/
ஸ்ரீவி., வனப்பகுதியில் பல்லுயிர்கள் பகுப்பாய்வு
ADDED : மே 29, 2024 06:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் பல்லுயிர்கள் குறித்தான பகுப்பாய்வு மற்றும் கள ஆய்வு துவங்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய 4 வனச்சரகங்களில் புலி, யானை, மான், சிறுத்தை, பாம்புகள் உட்பட ஏராளமான வனவிலங்குகள், பூச்சிகள் உள்ளது.
இவற்றின் நிலை குறித்து பகுப்பாய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளும் பணி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மே 27 முதல் ஜூன் 3 வரை 8 நாட்கள் நடத்த வனத்துறை திட்டமிட்டது.
இதில் பங்கேற்ற வனத்துறையினருக்கான பயிற்சி வகுப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இதில் துணை இயக்குனர் தேவராஜ் கள ஆய்வு குறித்து விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் முதல் வனக்காப்பாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்லுயிர் நிலையை, ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் தாவரங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் தரவுகளை சேகரிக்கின்றனர். பின்னர் இதனை துணை இயக்குனரின் ஒப்புதலுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க உள்ளனர் என துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.