/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி
/
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி
ADDED : மே 09, 2024 11:35 PM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 7 அறைகள் தரைமட்டமாகின.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் சரவணன் 55. இவருக்கு செங்கமலப்பட்டியில் சுதர்சன் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 20 அறைகள் உள்ளன. 80 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். நேற்று மதியம் 2:00 மணி அளவில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஏழு அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. ஏழு அறைகள் சேதம் அடைந்தன.
வெடி விபத்தில் பாறைப்பட்டி ஆவுடையம்மாள் 75, மத்திய சேனை ரமேஷ் 31, வி.சொக்கலிங்கபுரம் காளீஸ்வரன் 47, ரிசர்வ்லைன் காந்திநகர் முத்து 52, சின்னையாபுரம் விஜயகுமார் 30, வீரலட்சுமி 48, வசந்தி 38, பேச்சியம்மாள் 22, லட்சுமி 43 ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
மணல் அள்ளும் இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மத்திய சேனை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி 7 மணி நேரத்திற்கு பிறகு உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
இவர்களில் ஆவுடையம்மாள், மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ரிசர்வ் லைன் நேருஜி நகர் மல்லிகா 35, ஆலமரத்துப்பட்டி சுப்புலட்சுமி 62, மாரியம்மாள் 50, அய்யம்பட்டி நாகஜோதி 35, காந்திநகர் திருப்பதி 47, மத்திய சேனை இந்திரா நகர் கண்ணன் 30, மத்திய சேனை கிழக்கு தெரு அழகுராஜா 29, சின்னையாபுரம் விஜயகுமார் 28, மத்திய சேனை இந்திரா 48, ரெக்கமாள் 40, திருத்தங்கல் ஜெயராஜ் 42, காந்திநகர் மோகன்ராஜ் 35, மத்திய சேனை அம்சவல்லி 32, அய்யம்பட்டி செல்வி 39, மத்திய சேனை வீரலட்சுமி 35, காயமடைந்தனர். அனைவரும் சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை டி.ஐ.ஜி., ரம்யா பாரதி, கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, மத்திய பெட்ரோலியம் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஜனா, பட்டாசு தீப்பெட்டி ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, ஏ.டி.எஸ்.பி., சூரியமூர்த்தி, டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, பவித்ரா பார்வையிட்டனர்.
விதிமீறல் காரணமா
பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து அதிக ஆட்களை வைத்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளியில் பட்டாசுகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே உயிரிழப்பு, கட்டட சேதம் அதிகரித்துள்ளது.
உரிமையாளர் சரவணன் போர் மேன், மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த பட்டாசு ஆலை 2026 வரை உரிமம் பெற்றுள்ளது. விதி மீறி ஒப்பந்ததாரர் மூலமாக செயல்பட்டதாக தகவல் வந்துள்ளது. உரிமையாளர் உள்ளிட்டோரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
‛‛சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து செய்தி வேதனையளிக்கிறது. இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதல். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.''
- மோடி, பிரதமர்