/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சுற்றுச்சாலை: ரூ.120 கோடியில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
/
சிவகாசி சுற்றுச்சாலை: ரூ.120 கோடியில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
சிவகாசி சுற்றுச்சாலை: ரூ.120 கோடியில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
சிவகாசி சுற்றுச்சாலை: ரூ.120 கோடியில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
ADDED : மார் 04, 2025 06:44 AM

சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.120 கோடியில் 9.92 கிலோ மீட்டர் துாரத்திற்கு ரோடு அமைக்கும் பணியை தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், எரிச்சநத்தம் ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க 2012 ல் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தொடர்ந்து 2021 ல் சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. சுற்றுச் சாலை பணிக்காக 82 நில உரிமையாளர்களிடம் 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 10 வருவாய் கிராமங்களில் 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 3 பிரிவுகளாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
2024 ---- 2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் சாலைகளை இணைக்கும் வகையில் 9.92 கிலோமீட்டருக்கு ரோடு அமைக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல் கட்ட பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். கலெக்டர் ஜெயசீலன், அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் குப்பை சேகரிப்பதற்காக ரூ.2.02 கோடியில் வாங்கப்பட்ட 80 பேட்டரி வாகனங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பயன்பாட்டிற்கு வழங்கினார்.