/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்
/
அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்
ADDED : ஜூன் 15, 2024 07:03 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி டூவீலர்களில் கடத்திச் செல்வது அமோகமாக நடந்து வருவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டையில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் 15 ரேஷன் கடைகளும் புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் 15 கடைகள் என மொத்தம் 30 ரேஷன் கடைகள் நகரின் பல பகுதிகளில் உள்ளன.
இவற்றின் மூலம் பொது மக்களுக்கு தேவையான இலவச அரிசி மற்றும் சீனி, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு உட்பட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு ரேஷன் கார்டிற்கு 20 கிலோ இலவச அரிசி, வறுமை கோட்டின் கீழ் உள்ள கார்டு தாரர்களுக்கு மத்திய அரசின் 25 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இலவச அரிசி ஒரு சில நேரங்களில் தரமற்ற முறையில் வருவதால் மக்கள் விரும்பி வாங்குவதில்லை. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தரமற்ற அரிசி மூடைகள், தரமான அரிசி மூடைகள் என பிரித்து வழங்குகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி இருந்தாலும் அதை விநியோகிப்பது இல்லை. தரமான அரிசி 50 கிலோ 300 ரூபாய்க்கு ரேஷன் கடைகளிலேயே விற்கின்றனர். கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ள அரிசி டூவீலர்கள் மூலம் கடத்தப்படுகிறது. சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
அதிகாரிகளுக்கு இது தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. அருப்புக்கோட்டையில் தேர்தல் காலத்தில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகளால் வாகனங்கள் மூலம் கடத்தப்படும் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மற்ற நாட்களில் அரிசி கடத்தல் அருப்புக்கோட்டையில் அமோகமாக நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - - -