ADDED : ஆக 06, 2024 04:24 AM

சேத்துார்: ராஜபாளையம் கண்மாய்களில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ளும் அனுமதி வழங்கியதை முறைகேடாக விதிமுறையை மீறி அதிக ஆழம் தோண்டுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு தாசில்தார் அளவில் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இதை அடுத்து அரசியல்வாதிகளின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட கண்மாய்களில் விவசாயிகளை தவிர செங்கல் சூளை வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்படி அனுமதிக்கப்பட்ட கடவுச் சீட்டுகளை படி எடுத்து வைத்து 3 அடிக்கு பதில் அதிக ஆழம் கண்மாய்களில் மண் தோண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்வக்கனி: விவசாயிகளின் பெயரில் சூளைகளுக்கும் பல்வேறு வணிக பயன்பாட்டிற்கும் மண் அள்ளி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிக வருவாய் என்பதுடன் நடவடிக்கை என்பது கானல் நீர் ஆகி வருகிறது. 3 அடி அளவு என்பதை தாண்டி அதிக ஆழத்தில் கண்மாய்க்குள் சிறு குளங்களை உருவாக்கி உள்ளதை முறையாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.