/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்
/
விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்
ADDED : செப் 10, 2024 04:56 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போர்வையிலான மண் கடத்தல் தடுக்க இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் கண்மாய் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்ததை ரியல் எஸ்டேட் துறையினரும், செங்கல் சூளை அதிபர்கள் மும்முரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்று வட்டார கண்மாய்களில் மண் அள்ளுவதற்கான விதிமுறைகளை மீறி கண்மாய் கரைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி, கரைகளை ஒட்டியும், மடைகளில் தண்ணீர் வெளியேற வழி இன்றியும் அதிக ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர்.இயந்திரம் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு தென்றல் நகர் குடியிருப்பு பின்புறம் உள்ள செட்டிகுளம் கண்மாயில் பத்தடி ஆழத்திற்கும் அதிகமாக மண் அள்ளி ரியல் எஸ்டேட் பணிகளுக்காக நிலங்களை மேடாக்கும் பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளின் பெயரில் உள்ள 10.1 அடங்கலுக்கு ரூ. 2 ஆயிரம் என பணத்தை கொடுத்து அதை வருவாய் துறையினரிடம் வழங்கி அனுமதி சீட்டு வாங்குகின்றனர். ஒப்புதல் வழங்கப்பட்ட சீட்டுகளுக்கும் அள்ளப்படும் மண்ணிற்கும் சம்பந்தம் இருப்பதில்லை.
தொடர்ந்து விவசாயத்திற்கு ஆதாரமான கன்மாயின் உள்பகுதியில் சிறு சிறு தெப்பங்களாக மாற்றும் இவர்களின் செயல் எல்லை மீறி போவது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது என்ற விரக்தியில் விவசாய சங்கங்களும் தவித்து வருகின்றனர்.
மண் திருட்டை தடுக்கும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடு கேலிக்கூத்தாக்கி வருவதால் கண்மாயின் நிலை பரிதாபத்திற்கு உள்ளாகிறது.