/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கர்ப்பிணிகளுக்கு தனி கவனம், தாய்மை பூங்கா, வளாகத்தில் வனம் கன்னிச்சேரி புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் அசத்தல்
/
கர்ப்பிணிகளுக்கு தனி கவனம், தாய்மை பூங்கா, வளாகத்தில் வனம் கன்னிச்சேரி புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் அசத்தல்
கர்ப்பிணிகளுக்கு தனி கவனம், தாய்மை பூங்கா, வளாகத்தில் வனம் கன்னிச்சேரி புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் அசத்தல்
கர்ப்பிணிகளுக்கு தனி கவனம், தாய்மை பூங்கா, வளாகத்தில் வனம் கன்னிச்சேரி புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் அசத்தல்
ADDED : ஆக 25, 2024 04:17 AM

விருதுநகர்: விருதுநகர் கன்னிச்சேரி புதுார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தனி கவனம், தாய்மை பூங்கா, அதில் வண்ண மீன்கள், வளாகத்தில் வனம் உள்பட பலவற்றில் தொடர்ந்து அசத்தி வருகின்றது.
விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதுாரில் 2016 முதல் 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்கத்துடன் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
ஆவுடையாபுரம், ஆமத்துார், செங்குன்றாபுரம், அழகாபுரி, விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து பலரும் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த வளாகத்தில் சுத்தமான காற்றுடன் கூடிய இயற்கை அழகை ஏற்படுத்த தென்னை, வேப்பமரம் உள்பட பல மரங்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது நிழல் தருகிறது. மேலும் கர்ப்பிணிகள் பிரசவித்து செல்லும் போது தங்களின் நினைவாக மரங்களை நடுகின்றனர்.
இதையும் பராமரித்து வளர்ப்பதால் வளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்து சோலை வனமாக மாறியுள்ளது.
இங்குள்ள கிணற்றை மரத்தின் அமைப்பு போல வடிவமைத்து இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கண்ணை கவரும் வகையில் உள்ளது. இப்பகுதியில் 'தாய்மை பூங்கா' ஏற்படுத்தப்பட்டு, அதில் இரண்டு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் நீருற்று அமைப்பு, தொட்டியில் 25 வண்ண மீன்கள் வளர்க்கப்படுகிறது. ஒரு ஜோடி வாத்துக்கள் பூங்காவில் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
இங்கு தினமும் காய்ச்சல், வயிற்று போக்கு உள்பட பல உடல் உபாதைகளுக்காக 240 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
ஒரு மாதத்தில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் 32 பிரசவங்கள் நடக்கிறது. கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன் ராஜ் கூறியதாவது: அரசு சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதற்காக பல நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தனி நபர்களிடமிருந்து நிதி உதவி பெறப்பட்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, பிரசவம் செய்யப்பட்டு தாய், சேய் நலமுடன் திரும்ப வாகன வசதியும் இருப்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் தாய், சேய் சேர்ந்திருக்கும் புகைபடங்கள் பிரிண்ட் எடுத்து வழங்கப்படுகிறது.
பிசியோதெரபி சிகிச்சை வாரத்திற்கு இரண்டு நாள்கள், கண் மருத்துவம் வாரத்தில் ஒரு நாள் வழங்கப்படுகிறது. பல், சித்தா மருத்துவத்திற்கு தினமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது கூடுதலாக வெளி நோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த தேவையான பணிகள் தொடர்ந்து நடைபெறும், என்றார்.

