/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., மலையில் 5 கி.மீ. எரியும் காட்டுத்தீ அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
/
ஸ்ரீவி., மலையில் 5 கி.மீ. எரியும் காட்டுத்தீ அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
ஸ்ரீவி., மலையில் 5 கி.மீ. எரியும் காட்டுத்தீ அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
ஸ்ரீவி., மலையில் 5 கி.மீ. எரியும் காட்டுத்தீ அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
ADDED : மே 09, 2024 02:47 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் 5 கி.மீ. துாரத்திற்கு காட்டுத்தீ பற்றி எரிகிறது. அணைக்கும் பணியில் 3 நாட்களாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
ஜனவரி முதல் போதிய மழை பெய்யாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் காப்பக வனப்பகுதி மிகவும் வறண்டும், செடி, கொடிகள், புற்கள் காய்ந்து சருகாகியும் உள்ளன. தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள், புற்கள் தீப்பற்றின. ராக்காச்சி அம்மன் கோயில் முதல் அழகர் கோயில், விரியன் கோயில் என 5 கி.மீ., துாரத்திற்கு பல அடி உயரத்திற்கு காட்டு தீ பற்றி எரிந்தது.
வனச்சரகர் கார்த்திக் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைவாழ் மக்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கூடுதலாக வனத்துறையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் மூன்றாவது நாளாக நேற்று இரவும் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ எரிந்ததை 10 கி.மீ., அப்பால் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருந்து பார்க்க முடிந்தது.
மலைப்பகுதியில் கன மழை பெய்தாலோ அல்லது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்தாலோ மட்டுமே காட்டுத்தீயை அணைக்க முடியும்.
இந்நிலையில் நேற்று இரவு 7:15 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் பலத்த சாரல் மழை பெய்தது. மலைப்பகுதியிலும் பெய்திருந்தால் தீ தானாகவே அணைந்துவிடும் வாய்ப்புள்ளது.