/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள் விவசாயிகள் அச்சம்
/
ஸ்ரீவி.,தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள் விவசாயிகள் அச்சம்
ஸ்ரீவி.,தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள் விவசாயிகள் அச்சம்
ஸ்ரீவி.,தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள் விவசாயிகள் அச்சம்
ADDED : செப் 13, 2024 04:50 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்துவது தொடர்ந்து நீடிக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, அத்திதுண்டு, ராக்காச்சி அம்மன் கோயில் மலையடிவார தோப்புகளில் கடந்த சில வாரங்களாக யானைகள் மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வந்தது.
இதுவரை மலை அடிவார தோப்புகளில் மட்டுமே சுற்றித்திரிந்த யானைகள் தற்போது தோப்பையும் கடந்து மம்சாபுரம் ஊருக்குள் செல்லும் வழியில் உள்ள கண்மாய் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நடமாடி வருகிறது.
நேற்று முன் தினம் இரவு தோப்புக்கு வந்த யானை ஒன்று நேற்று காலை 8:00மணி வரை, மம்சாபுரம் ரோட்டில் வேப்பங்குளம், குறவனகுட்டை கண்மாய் பகுதிகளிலும் சுற்றி திரிந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினரும் யானையை சில மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதற்கிடையில் ராக்காச்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் ஜெகதீஸ்வரன் தோப்பில் புகுந்த ஒரு யானை, மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்தியும், குடிநீர் குழாய்களை உடைத்துள்ளது.
இதுகுறித்து மம்சாபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது; செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில் பகுதியில் திரியும் யானைகள் இதுவரை ரோடுகளை தாண்டி வந்ததே கிடையாது.
தற்போது வரும் யானைகள் கேரளாவில் இருந்து வழித்தடம் மாறி இடம்பெயர்ந்த யானைகளாக இருக்கலாம்.
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அடர் வனப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் யானைகள் அடிவாரப் தோப்புகளுக்குள் வந்திருக்கலாம்.
வனத்துறையினரும் தினமும் யானையை விரட்டி வந்தாலும் இரவு நேரங்களில் தோப்புகளுக்கு யானைகள் வருவது தொடர்ந்து நீடிக்கிறது. பயிர்களை சேதப்படுத்துவது எங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதற்கு வனத்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும். என்றனர்.