/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை
ADDED : ஆக 03, 2024 10:17 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஐந்தாம் நாளான நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருடசேவையும் நடந்தன.
நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள் கோவிலில் இருந்து பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருளி, பெரிய பெருமாளுக்கும், கருட வாகனங்களில் எழுந்தருளிய காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கும் மங்கள சாசனம் செய்தார்.
இதற்காக ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளை கோவில் பட்டர்கள் செய்தனர்.
பின்னர் இரவு 10:00 மணிக்குமேல் ஐந்து கருட சேவை துவங்கியது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி மற்றும் ரத வீதிகளை சுற்றி வந்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், நாம சங்கீர்த்தன பஜனையுடன் ரத வீதிகளில் வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சடகோபால ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கோவில் பட்டர்கள், அறங்காவலர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.