/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்தூர் வார்டு விசிட்
/
ஸ்ரீவில்லிபுத்தூர் வார்டு விசிட்
ADDED : ஏப் 24, 2024 12:11 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 27 வது வார்டில் புதர்மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகளால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டம், சாக்கடை ஆக்கிரமிப்பு, மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் கழிவு நீர் உட்பட பல்வேறு குறைகள் காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வார்டில் முதலியார் பட்டி தெரு, கொளூர்பட்டி தெரு, கொளூர்பட்டி தெற்கு தெரு ஆகிய தெருக்கள் உள்ளன.
முதலியார்பட்டி மெயின் தெருவில் சிமெண்ட் ரோடு நன்றாக இருந்தாலும் அதனை ஒட்டி உள்ள குறுகிய சந்துக்கள் கொண்ட தெருக்களில் ரோடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
வாறுகால்களில் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
முதலியார்பட்டி வடக்கு பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வார்டின் அனைத்து பகுதிகளிலும், தெரு ஆக்கிரப்புகளும், சாக்கடை ஆக்கிரப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது கொளூர்பட்டி தெற்கு தெருவில் ரோடு, வாறுகால் கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள நீர் வரத்து ஓடையில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு பாலத்தின் கண்கள் அடைப்பட்டு கிடக்கிறது.
இதனால் இந்த வார்டினை சுற்றி சுகாதாரக் கேடு, கொசுத்தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டம் தினசரி காணப்படுவதாகவும், இதனை முழு அளவில் சுத்தம் செய்து தூய்மையான வார்டாக மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை அடைப்புகளை அகற்ற வேண்டும்
-நாகம்மாள், முன்னாள் கவுன்சிலர்: மெயின் தெருவின் இருபுறமும் உள்ள சாக்கடை அடைப்புகளால் மழை பெய்தால் சந்துப்பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நின்று சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.
நடந்து செல்ல முடியவில்லை. விஷ பூச்சிகள் நடமாட்டம் ஏற்படுகிறது. எனவே, சாக்கடை அடைப்புகளை அகற்றி தூய்மையான பகுதியாக உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும்
-குருசாமி, குடியிருப்பாளர்: கொளூர் பட்டி தெற்கு தெருவின் நீர்வரத்து ஓடையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். முறையான ரோடு, வாறுகால் வசதி செய்து தர வேண்டும். குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் தர வேண்டும்.
நகராட்சியில் கோரிக்கை
-ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்: நகராட்சியில் நான் வைத்த கோரிக்கையின் பேரில் கொளூர்பட்டி தெற்கு தெருவில் வாறுகாலுடன் கூடிய ரோடு வசதி செய்யும் பணி நடந்து வருகிறது. இரண்டு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து ஓடைகளில் முழு அளவில் சுத்தம் செய்து தரவும், தினசரி தூய்மை பணியை மேற்கொள்ளவும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
நடவடிக்கை எடுக்கப்படும்
-ரவிக்கண்ணன், நகராட்சி தலைவர்: வார்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகள் சரி செய்யப்படும்.

