/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் நகராட்சியில் மூடி கிடக்கும் பொது சுகாதார வளாகங்களால் அவதி
/
சாத்துார் நகராட்சியில் மூடி கிடக்கும் பொது சுகாதார வளாகங்களால் அவதி
சாத்துார் நகராட்சியில் மூடி கிடக்கும் பொது சுகாதார வளாகங்களால் அவதி
சாத்துார் நகராட்சியில் மூடி கிடக்கும் பொது சுகாதார வளாகங்களால் அவதி
ADDED : மே 26, 2024 03:43 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சியில் மூடிக்கிடக்கும் பொது சுகாதார வளாகங்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காமராஜபுரம், நம்மாழ்வார் காம்பவுண்டு, வெம்பக்கோட்டை ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மதுரை பஸ் ஸ்டாப்பில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
மதுரை பஸ் ஸ்டாப்பில் உள்ள பொது சுகாதார வளாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் மூடிய நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நான்காவது வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களும் மதுரை பஸ் ஸ்டாப்பில் நிற்கும் வெளியூர் பயணிகளும் வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி அவதிப்படும் நிலை உள்ளது.
இதேபோன்று வைப்பாறு பழைய எஸ்.ஆர். பூங்கா அருகில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடக்கின்றது.
பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வந்த போதும் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்த முஸ்லிம் தெரு, கீழக்காந்திநகர், தெற்கு ரத வீதி, பங்களாத் தெரு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வைப்பாற்றங்கரை திறந்தவெளியை நாடும் நிலை உள்ளது.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
கவுன்சிலர்கள் கூட்டத்தில் இந்த இரு சுகாதார வளாகத்தையும் சீரமைத்து திறக்க வலியுறுத்தி கவுன்சிலர்கள் பலமுறை வலியுறுத்திய போதும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் இரு பொது சுகாதார வளாகங்களும் இன்றுவரை திறக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இனியும் கால தாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் இரு பொது சுகாதார வளாகங்களையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.