/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை; 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை; கோவிலான்குளத்தில் 79. 50 மி.மீ.,
/
மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை; 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை; கோவிலான்குளத்தில் 79. 50 மி.மீ.,
மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை; 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை; கோவிலான்குளத்தில் 79. 50 மி.மீ.,
மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை; 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை; கோவிலான்குளத்தில் 79. 50 மி.மீ.,
ADDED : மே 16, 2024 06:05 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கோடையின் கனமழை கொட்டி தீர்த்தது. நாள் முழுவதும் மேகமூட்டத்துடனும், குளுமையான சூழலும் காணப்பட்டதால் மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கோவிலான்குளத்தில் 79. 50 மி.மீ., மழை அளவு பதிவானது.
விருதுநகரில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்ட நிலையில் காலை 11:00 மணி வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதற்கு பின் படிப்படியாக குறைந்து கனமழை கொட்டி தீர்த்தது. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் இதே நிலை நீடித்தது.
நேற்று காலை 8:00 மணி வரை (மில்லி மீட்டரில்) திருச்சுழி 21, ராஜபாளையம் 46, காரியப்பட்டி 8.60, ஸ்ரீவில்லிப்புத்துார் 38, விருதுநகர் 2.20, சாத்துார் 32, சிவகாசி 15.20, பெரியாறு பிளவக்கல் 5.20, வத்தராயிருப்பு 3.80, வெம்பக்கோட்டை 3.70, அருப்புக்கோட்டை 10 என மொத்தம் 265.20 மி.மீ., அளவில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கோவிலன்குளத்தில் 79.50 மி.மீ., மழை பெய்தது. நேற்று மாலை 4:30 வரை (மில்லி மீட்டரில்) காரியாபட்டியில் 25.8, விருதுநகர் 15.6, சாத்துார் 20, அருப்புக்கோட்டை 35.8 என மொத்தம் 106.2 மி.மீ., மழை பெய்தது.
மாவட்ட நிர்வாகம் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்(மே 15 மதியத்தில் இருந்து மே 16 மதியம் வரை) விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அலுவலர்கள் பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் மழைக்கால இடர்பாடுகள் எதும் இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை எண் 04562 1077 -ஐ தொடர்பு கொள்ளலாம், என்றார்.
குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
திருத்தங்கல் ஆலாவூரணி திருப்பதி நகரில் நேற்று பெய்த மழையில் தண்ணீர் வெளியேற வழி இன்றி குடியிருப்புகளை சூழ்ந்து விட்டது. வீடுகளில் படி வரை தண்ணீர் வந்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது என பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை
நேற்று முன்தினம் மாலை சிறிய மழை பெய்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு துவங்கிய மழை 1 மணி நேரம் மிதமாக பெய்தது. இதில், பூக்கடை பஜார், டெலிபோன் ரோடு, புளியப்பட்டி, திருநகரம் உட்பட பல பகுதிகளில் வாறுகாலில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஓடியது. பூக்கடை பஜார் வெள்ளக்காடாக மாறி அப்பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் தண்ணீர் புகுந்தது.
சாத்துார்
சாத்துார் , படந்தால், சத்திரப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மழைக் காரணமாக குளிர் காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.