ADDED : ஜூலை 09, 2024 04:38 AM

சிவகாசி: ரோடு சேதம், கழிவுநீர் தேக்கம், நாய்கள் தொல்லை என திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
திருத்தங்கல் பழைய வெள்ளியாபுரம் ரோடு பகுதியில் ரோடு சேதம் கழிவு நீர் தேக்கம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் தொட்டியிலிருந்து நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது ஆனால் ஆங்காங்கே குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகின்றது.
இப்பகுதியில் நடமாடும் தெரு நாய்களால் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தவிர வாறுகால் துார்வாரப்படவில்லை. வேன் ஸ்டாண்ட் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பாண்டியன் நகர், சத்யா நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.
கண்ணன்: திருத்தங்கல்அண்ணாதுரை பஸ் ஸ்டாப்பில் இருந்து தேவர் சிலை, போலீஸ் ஸ்டேஷன் வழியாக பழைய வெள்ளையாபுரம் செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் வரையிலான ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் சேதமடைந்த ரோடு குறுகியதாகவும் இருப்பதால் எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்லவும் முடியவில்லை.
தங்கம்: இதே ரோட்டில்உள்ள செங்குளம் கண்மாய் எதிரே பெரிய கிடங்கு உள்ளது. இப்பகுதியில் வாறுகால் இல்லாததால் பாண்டியன்நகரின் மொத்தக் கழிவுகளும் இங்கு வந்து தேங்குகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது.
மேலும் அருகிலேயே மாநகராட்சி மண்டல அலுவலகமும் செயல்படுகின்றது. போலீஸ் ஸ்டேஷன், மண்டல அலுவலகத்திற்கு வருகின்ற மக்கள் துர்நாற்றத்தினால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.