ADDED : நவ 22, 2024 03:40 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்த தெற்கு பட்டியில் சேதமான ரோடு, வாறுகால், குடிநீர், கழிப்பறை, மயானத்தில் வசதிகள் இல்லாதாதல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கொப்புசித்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது தெற்குப்பட்டி. இங்கு பொது கழிப்பறை இல்லாததால் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நிதி இல்லை என காரணம் கூறி, வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் உள்ளது.
இங்கு சமுதாய கூடம் இல்லாததால் மக்கள் 5 கி.மீ., தூரத்தில் உள்ள பந்தல்குடி, அருப்புக்கோட்டை என தனியார் திருமண மண்டபங்களை அதிக வாடகை கொடுத்து விழாக்களை நடத்த வேண்டிய உள்ளதாகவும் கூறுகின்றனர். ஏழை மக்கள்மிகவும் சிரமமப்படுகின்றனர்.
இந்தப் பகுதியில் ஊர் மக்களின் நலன் கருதி சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் கட்டப்பட்டுள்ளதால் சேதம் அடைந்துஉள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. புதிய வாறுகால்கள் அமைக்கப்பட வேண்டும்.
காலனி பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அல்லாடுகின்றனர். இங்கு ஒரு மேல்நிலைத் தொட்டி கட்டி இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி மயானத்திற்கு செல்லும் பாதை மோசமான நிலையில் உள்ளது. மயானத்திற்கு பாதை அமைத்தும், அங்கு தண்ணீர், தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் வரும் ரோடு குண்டும், குழியுமாகஉள்ளது. புதியதாக ரோடு அமைக்க வேண்டும். தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும்.
வளர்ச்சி பணிகள் இல்லை
ஜெய்சங்கர், விவசாயி: கொப்புசித்தம் பட்டியில் உள்ள தெற்குப்பட்டி, வடக்குப்பட்டி, காலனி தெரு பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள்இல்லை. வளர்ச்சி பணிகள் செய்ய ஊராட்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். கொப்புசித்தம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.
வாறுகால், ரோடு வேண்டும்
ராமு, தனியார் ஊழியர்: தெற்குப்பட்டி, வடக்குப்பட்டி, காலனியில் உள்ள தெருக்களில் ரோடு இல்லை. மெயின் ரோடும் மோசமான நிலையில் உள்ளது. தெருக்களில் வாறுகால் அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சேதமடைந்தும் கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்ய நிதி இல்லை என காரணம் கூறுகிறது.
சமுதாயக்கூடம், ரேஷன் கடை வேண்டும்
முத்துகனி, குடும்பதலைவி: கொப்பு சித்தம்பட்டியில் ரேஷன் கடை இல்லாததால் 2 கி.மீ., தள்ளியுள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குகிறோம். பெண்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இந்தப் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
சமுதாயக்கூடம் இல்லாததால் திருமணம் மற்றும் வைபவங்களை நடத்த முடியாமல் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.