ADDED : பிப் 14, 2025 06:26 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் உள்ள இ.பி., காலனியில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து இருப்பதாலும், தெருக்களில் ரோடு, வாறுகால் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது இ.பி., காலனி. இந்தப் பகுதியை உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள்எதுவும் செய்யப்படவில்லை.
காலனியில் 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த பகுதிக்கு வரும் மெயின் ரோடு கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. பல தெருக்களில் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் குண்டும் குழியுமாகவும், முட்புதர்கள் வளர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது.
பல தெருக்களில் வாறுகால்கள் சேதமடைந்தும் கழிவுநீர் வெளியேற முடியாமல் இருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. இங்குள்ள 2வது தெருவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் அனைத்தும் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. தொட்டியின் மேல் புறமும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது என்றாலும் விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்திலும்தாமிரபரணி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இ.பி., காலனியில் மட்டும் தாமிரபரணி குடிநீர் வருவது இல்லை. மேல்நிலைத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரும் உப்பு தன்மையுடன் இருப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.
ஒரு ஆண்டிற்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் தண்ணீர் தான் வருவது இல்லை. குழாய்கள் அனைத்தும் காட்சி பொருளாக உள்ளது. நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லையும் தாங்க முடிவதில்லை.
குடிநீர் இல்லை
ராஜகுமாரி, குடும்பத் தலைவி: இ.பி., காலனியில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் எங்கள் வீட்டிற்கு மட்டும் இணைப்பு தரவில்லை. டெபாசிட் பணம் கட்டியும் குழாய் இணைப்பு தர மறுக்கின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி தான் பயன்படுத்துகிறோம்.
படுமோசமான ரோடு
ரேணுகாதேவி, குடும்பத்தலைவி: இ.பி., காலனியில் தெருக்களில் ரோடு இல்லாமல் நாங்கள் சிரமப்படுகின்றோம். பல தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது.
மழை காலமானால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக நடக்க முடியாமல் உள்ளது. ரோடு அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி கண்டு கொள்ளவில்லை. எங்கள் பகுதிக்குரோடு அமைத்து தர வேண்டும்.
அடிப்படை வசதிகள் தேவை
சந்தனமாரி, குடும்பத்தலைவி: இ.பி., காலனி உருவாகி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் வாறுகால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. இங்கு கட்டப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியும் மோசமான நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியை மட்டும் புறக்கணிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.