/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீசலுாரில் ரோட்டில் தார் கழிவுகள்; விவசாயிகள் வேதனை
/
மீசலுாரில் ரோட்டில் தார் கழிவுகள்; விவசாயிகள் வேதனை
மீசலுாரில் ரோட்டில் தார் கழிவுகள்; விவசாயிகள் வேதனை
மீசலுாரில் ரோட்டில் தார் கழிவுகள்; விவசாயிகள் வேதனை
ADDED : ஜூலை 20, 2024 12:12 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே மீசலுார் செல்லும் ரோட்டின்பழைய தார் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் மண்வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
விருதுநகர்-சிவகாசி ரோடு வழியாக மீசலுார் செல்லும் ரோடு சேதமடைந்து பள்ளங்களாக உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தார் ரோடு அமைப்பதற்கான பணிகள் நடந்தது. இந்த பணிகளின் போது பழைய தார் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிய ரோடு அமைக்கப்பட்டது.
ஆனால் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் ரோட்டின் ஓரத்தில் அப்படியே கொட்டப்பட்டது. இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ரோட்டின் இருபுறமும் செல்லும் நீர் வழிப்பாதைகளில் தடை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆடிப்பட்டத்திற்காக விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வரும் நிலையில் தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இக்கழிவுகள் விவசாய நிலங்களில் கலப்பதால் மண்வளம் பாதித்து பயிர்கள் சரியான முறையில் வளர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டின் இருபுறத்திலும் புதிய மரங்களை நடவு செய்ய தன்னார்வலர்கள் தயாராக இருந்தும் தார் கழிவுகளால் மேற்கொண்டு பணிகளை செய்ய முடியவில்லை.
எனவே உள்ளாட்சி நிர்வாகம் மீசலுார் ரோட்டின் ஓரத்தில் கொட்டப்பட்ட தார் கழிவுகளை அகற்றி விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

