ADDED : ஆக 11, 2024 11:21 PM

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் -- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லுாரி பேராசிரியை ஸ்ரீதேவி 45, பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
விருதுநகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி, திரிபுரசுந்தரி 46. சாத்துார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியைகள். ஸ்ரீதேவிக்கு சொந்தமான காரை மேலப்புதுாரை சேர்ந்த டிரைவர் விஜய் 40, ஓட்ட மூவரும் சங்கரன்கோவிலில் நடந்த ஸ்ரீதேவியின் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழி சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். திரிபுரசுந்தரி, விஜய் படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.