/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாரபட்சமாக குடிநீர் வழங்குவதை கண்டித்து நகராட்சியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
/
பாரபட்சமாக குடிநீர் வழங்குவதை கண்டித்து நகராட்சியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
பாரபட்சமாக குடிநீர் வழங்குவதை கண்டித்து நகராட்சியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
பாரபட்சமாக குடிநீர் வழங்குவதை கண்டித்து நகராட்சியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
ADDED : மே 31, 2024 06:31 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளத்தின்கிழக்கு பகுதியில் உள்ள வார்டுகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி குடிநீரையும், மேற்கு பகுதியில் உள்ள வார்டுகளுக்கு உப்புத்தன்மையுள்ள ஆனைக்குட்டம் குடிநீரை 10 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் நகராட்சி பகுதிக்கு ஆனைக்குட்டத்தில் 13 கிணறுகள் மூலம் தினசரி 25 லட்சம் லிட்டர் வரை குடிநீரும், பழைய தாமிரபரணி குடிநீர் 20 லட்சம் லிட்டரும் வழங்கப்படுகிறது.
கோடை காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் போது காரிசேரி, ஒண்டிப்புலிநாயக்கனுார் பகுதியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் வரை குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் நகராட்சிக்கென ரூ.444 கோடியில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் 2021ல் துவங்கப்பட்டது.
இதன் மூலம் தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் விருதுநகருக்கு தனியாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அத்திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பணி ஓரளவு நிறைவடைந்துள்ளது. அதன் மூலம் கடந்த சில மாதங்களாக விருதுநகரில் உள்ள நகராட்சி பூங்காவில் உள்ள 6.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிக்கு குடிநீர் வருகிறது. இக்குடிநீரைரயில்வே தண்டவாளத்தின்கிழக்கு பகுதியில் உள்ள வார்டுகளுக்கு மட்டும் 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்குவதாகவும், அதே நேரம் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ராமமூர்த்தி ரோடு, மதுரை ரோடு, அகமது நகர் குடிநீர் தொட்டிகளில் உப்புத் தன்மையுள்ள ஆனைக்குட்டம் குடிநீர் ஏற்றப்பட்டு 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் பராபட்சமான அணுகுமுறையை கண்டித்து நகராட்சி கவுன்சிலர்கள் சுல்தான் அலாவுதீன் (தி.மு.க.,), உமாராணி, முத்து லெட்சுமி (சுயே.,), முத்துராமன் (தி.மு.க.,), ராஜ்குமார் (காங்.,), ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர் கமிஷனர் அறையை முற்றுகையிட்டனர்.
நகராட்சி கமிஷனர் லீனாசைமன் பேச்சுவார்த்தை நடத்தினார். புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த பின் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.