/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சண்டையை விலக்க சென்றவர் கொலை 4 பேருக்கு ஆயுள்
/
சண்டையை விலக்க சென்றவர் கொலை 4 பேருக்கு ஆயுள்
ADDED : ஆக 30, 2024 10:13 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பக்கத்து வீட்டுச் சண்டையை விலக்கி விட சென்ற ராஜசேகர் 30, என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி 37, மகேந்திரன் 30, பாண்டியராஜ் 22, முத்தையா 33, ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி. இவரது அம்மா பார்வதி இறந்த பிறகு அவரது பெயரில் இருந்த வீட்டு காலி மனையை ஆனந்தவல்லி அனுபவித்து வந்தார். அதனை தங்களுக்கு பிரித்து தருமாறு கேட்டு அவரது சகோதரர்கள் தங்கப்பாண்டி, மகேந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
2017 ஜன. 11 இரவு 7:30 மணிக்கு அவர்கள் இருவரும் உறவினர்களான பாண்டியராஜ், முத்தையா ஆகியோருடன் சகோதரி ஆனந்தவள்ளியின் வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வசித்த ராஜசேகர், மனைவி பரமேஸ்வரி, சகோதரர் கார்த்திக் ஆகியோர், நான்கு பேரையும் கண்டித்து சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் ராஜசேகர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த பரமேஸ்வரி, கார்த்திக் வெட்டப்பட்டனர்.
தங்கப்பாண்டி, மகேந்திரன், பாண்டியராஜ், முத்தையா ஆகியோரை ராஜபாளையம் தெற்கு போலீசார்கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார்.