/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் தொடரும் பாடநுால் பற்றாக்குறை
/
மாவட்டத்தில் தொடரும் பாடநுால் பற்றாக்குறை
ADDED : ஜூலை 04, 2024 12:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல வகுப்புகளுக்கு இன்னும் பாடநுால்கள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு உயிரியல் உள்ளிட்ட பாடநுால்கள் பற்றாக்குறை தொடர்கிறது. இதே போல் ஆங்கில மீடியத்திற்கான புத்தகங்களில் சிலவும் பற்றாக்குறை உள்ளது. கடந்த மாதம் மாவட்டத்தில் 1714 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 154 அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மேல்நிலை மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இது தவிர அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு பாடப்பிரிவு பாடநுால்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்ஒரு சில உதவி பெறும் பள்ளிகளின் சில வகுப்புகளில் பாடநுால்கள் பற்றாக்குறை உள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அரசு பள்ளியிலும் பாடநுால் பற்றாக்குறை உள்ளதுதெரிய வந்துள்ளது.
சிவகாசி நாரணாபுரத்தில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் தங்களுக்கு உயிரியல் புத்தகங்கள் வரவில்லை என புகார் கூறி உள்ளனர். ஒரு மாதமாக ஆசிரியர் மட்டும் புத்தகத்தை வைத்து நடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் மாணவர்கள் அதிக விலை கொடுத்து வெளியே கடைகளில் வாங்கும் அவலம் ஏற்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.இது போன்ற சூழலால் அவதிப்படும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் தற்போது வரை புத்தகங்கள் சரிவர கிடைக்காமல் உள்ளது. விரைவில் முதல் தேர்வும் நடக்க உள்ளது. பாடநுால் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண பள்ளிக்கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.