ADDED : ஏப் 23, 2024 12:34 AM

சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஊராட்சி அதிவீரன்பட்டி ஓடையில் உள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஊராட்சி அதிவீரன்பட்டி ஊருக்கு முன்பாக திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயிலிருந்து வருகின்ற ஓடை செல்கிறது. இந்த ஓடையில் 30 மீட்டர் நீளத்திற்கு பாலம் உள்ளது.
இந்த பாலத்தை கடந்து ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. மேலும் பாலத்தின் ஓரத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் இறுதிப் பகுதியும் தெரியவில்லை.
இதனால் டூவீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தெரு விளக்குகளும் இல்லாததால் இரவில் வருபவர்கள் தடுமாறுகின்றனர். வாகனங்கள் கவிழ்ந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

