/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
ரயில் பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : பிப் 15, 2025 04:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவை சேர்ந்தவர் வைகுண்ட மூர்த்தி. இவர் 2023 டிச., 6 ல் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்கு தட்கல் ரிசர்வேஷன் மூலம் டிக்கெட் எடுத்திருந்தார்.
அன்றைய தினம் மழையின் காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டு விட்டது என அவரது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. பின்னர் அவரது முன்பதிவும் ரத்தாகி உள்ளது. ஆனால், முன்பதிவு கட்டணம் அவருக்கு திரும்ப அனுப்பப்படவில்லை.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர், ஐ.ஆர். சி. டி.சி. பொது மேலாளர் ஆகியோரிடம் முறையிட்டும் பணம் திரும்ப வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட வைகுண்ட மூர்த்தி ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர். இதில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுத்தொகை ரூ. 458ஐ திரும்ப வழங்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ. 3 ஆயிரத்தை 6 வார காலத்திற்குள், ரயில்வே துறையினர் வழங்க உத்தரவிட்டனர்.

