/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் 40 இடங்களில் 'டிரக்கிங்'?
/
மேற்கு தொடர்ச்சி மலையில் 40 இடங்களில் 'டிரக்கிங்'?
மேற்கு தொடர்ச்சி மலையில் 40 இடங்களில் 'டிரக்கிங்'?
மேற்கு தொடர்ச்சி மலையில் 40 இடங்களில் 'டிரக்கிங்'?
ADDED : செப் 17, 2024 09:41 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையில் தேனி, விருதுநகர் ,கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 12 மாவட்டங்களில் 40 வனப்பாதையில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் டிரக்கிங் அழைத்துச் செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் துவங்கி கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் வரை நீண்டு காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான டிரக்கிங் என்னும் மலையேற்ற பகுதிகள் உள்ளன.
இதில் கேரளா, கர்நாடகாவில் அரசின் சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் வனத்துறையினரே சுற்றுலா பயணிகளை மலையேற்றத்திற்கு அழைத்து செல்கின்றனர். தமிழகத்தில் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இயற்கை ஆர்வலர்கள் முறையான அனுமதியின்றி வனப்பகுதிகளில் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு செல்லும்போது பல்வேறு அபாயத்திற்கு மக்கள் ஆளாகின்றனர்.
2018ல் தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து கேரளா, கர்நாடகாவை போல் தமிழகத்திலும் அரசின் சார்பில் மலையேற்றம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று தமிழக வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது.
இதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி , கன்னியாகுமரி, திருநெல்வேலி, உட்பட 12 மாவட்டங்களில் 40 வனப் பாதைகளை கண்டறிந்து பழங்குடியினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் செண்பகத் தோப்பில் இருந்து வ.புதுப்பட்டி வரை 10 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகளையும், ஆயத்தப் பணிகளையும் வனத்துறையினர் செய்துள்ளனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் தினத்தை எதிர்பார்த்து இயற்கை ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இயற்கையை காப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்புடன் மலையேற்றம் அழைத்துச் செல்லவும், வனத்துறையின் சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் 40 வனப்பாதைகளில் விரைவில் மலையேற்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.