ADDED : செப் 03, 2024 04:45 AM
சிவகாசி ; சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துாரில் வெவ்வேறு சம்பவங்களில்ரயிலில் அடிபட்டு இருவர் பலியாயினர். தவறிவிழுந்த போலீஸ்காரர் காயமடைந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 9:20 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் நின்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் திடீரென ரயில் முன்பு விழுந்து பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாக பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் 65, இவர் தனது மனைவி பரமேஸ்வரி 58, மகள் முத்துமீனா 32, ஆகியோருடன் கோவையில் வசித்து வந்தார். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நாக பாளையத்தில் மகன் மணிகண்டன் வீட்டில் தங்கி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனை அவரது மகன் கண்டித்த நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு நாகபாளையம் அருகில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. சமாதானம் விசாரித்தார்.
போலீஸ்காரர் காயம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 28. இவர் மயிலாடுதுறை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை - திருச்செந்துார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
விருதுநகர் பட்டம்புதுார் அருகே நேற்று அதிகாலை 3:30 மணிக்கு சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.