/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுாலக கட்டடமின்றி பயன்படாமல் உள்ள புத்தகங்கள்
/
நுாலக கட்டடமின்றி பயன்படாமல் உள்ள புத்தகங்கள்
ADDED : மார் 08, 2025 05:23 AM

சத்திரப்பட்டி : ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி கிளை நுாலக கட்டடம் சேதத்தால் 3 ஆண்டுகளாக முப்பதாயிரம் புத்தகங்கள் யாருக்கும் பயன்படாமல் முடங்கி உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எதிர்பார்த்து ஏக்கத்தில் உள்ளனர்.
சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் கிளை நுாலக கட்டடம் இயங்கி வருகிறது.
7 சென்ட் இடத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நுாலகம், வாசிப்பு அறை என தனித்தனியாக இயங்கி வந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.
நுாலகம் அருகே இரண்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பயிலும் சூழலில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களுடன் 140 புரவலர்களுடன் பல்வேறு தலைப்புகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் மாற்று இடவசதி இல்லாததால் அடைக்கப்பட்ட கட்டடத்தில் மூடை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தெரு அருகே மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில் மூன்று ஆண்டுகளாக இயங்கி வருவதுடன் போதிய இடவசதி இல்லாததால் குறிப்பிட்ட சில புத்தகங்களுடன் மட்டும் செயல்பட்டு வருகிறது.
இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் போதிய இட வசதியும் இன்றி புத்தகங்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் ஏக்கத்தில் உள்ளனர்.
புதிய நுாலகங்கள் திறப்பில் அக்கறை காட்டும் அரசு சொந்த இடம் இருந்தும் செயல்பட வழியின்றி உள்ள நுாலகத்திற்கு புதிய கட்டடத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் என மாணவர்கள் உள்ளிட்ட வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.